நீதிபதிகளை பாராளுமன்ற சிறப்புரிமை குழுவுக்கு அழைத்தால் பாரதூரமான விளைவுகள் ஏற்படும் – ஜி.எல்.பீரிஸ்

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடவடிக்கைகளுக்கான நிதி விடுவிப்பு தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கிய இடைக்காலத் தடையுத்தரவை ஆளும் தரப்பினர் நாடாளுமன்ற சிறப்புரிமை ஊடாக விமர்சிப்பது முற்றிலும் தவறானது.

நீதிபதிகளை நாடாளுமன்ற சிறப்புக்குழுவுக்கு அழைத்து அவர்களை விசாரணை செய்தால் நாட்டில் பாரதூரமான விளைவுகள் ஏற்படும், ஆகவே, நீதித்துறை சவாலுக்குட்படுத்தி அரசமைப்பை மலினப்படுத்துவதை அரசாங்கம் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சர்வஜன வாக்குரிமை தொடர்பிலான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்

அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு –

தேர்தலை நடத்தியதால் உலகில் எந்த நாடும் வங்குரோத்து நிலை அடையவில்லை, தேர்தலை நடத்தாத காரணத்தால் நாடுகள் வங்குரோத்து நிலை அடைந்த சம்பவங்கள் பல உள்ளன. ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் இரண்டு பிரேரணைகளை நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ளார்கள்.

உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள இடைக்காலத் தடையுத்தரவால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக ஆளும் தரப்பின் இரு உறுப்பினர்கள் முன்வைத்துள்ள சிறப்புரிமை பிரேரணையால் பாரதூரமான விளைவுகள் தோற்றம் பெறும். இந்த பிரேரணைகள் தொடர்பில் மிக அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க முன்வைத்த சிறப்புரிமை மீறல் தொடர்பான பிரேரணையை செயற்படுத்த வேண்டுமாயின் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள ரிட் மனுக்களை இடைநிறுத்த வேண்டும். வழக்குகள் தொடர்பில் கட்டளை பிறப்பிக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்குக் கிடையாது.

நீதிபதிகளை நாடாளுமன்றத்தின் சிறப்பு குழுவுக்கு அழைத்து அவர்களிடம் கேள்வி கேட்பது நாட்டின் அரசமைப்பை கொலை செய்யும் ஒரு செயற்பாடாகக் கருதப்படும். நாட்டின் முத்துறை அதிகாரம் வேறுப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு துறை பிற துறையை மதிக்க வேண்டும்,

நாட்டின் அரசியல் வரலாற்றில் நீதிபதிகள் நாடாளுமன்றத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார்கள், அதன் பெறுபேறு பாரதூரமாக முடிந்தது. தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் பாரிய நெருக்கடிளை எதிர்கொள்ள நேரிடும.; ஆகவே வரலாற்று ரீதியான பாடங்களை ஆளும் தரப்பினர் கற்றுக்கொள்ள வேண்டும்.

நீதிமன்றத்தின் செயற்பாடுகளை சவாலுக்குட்படுத்தினால் நாட்டில் மாறுபட்ட பல பிரச்சினைகள் தோற்றம் பெறும் என்பதை ஆளும் தரப்பினர் முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும். நாட்டு மக்கள் நிறைவேற்றுத்துறை மற்றும் சட்டவாக்கத்துறை ஆகியவற்றை கடுமையாக விமர்சிப்பார்கள், ஆனால் நீதித்துறையை ஒருபோதும் விமர்சிக்கமாட்டார்கள். ஆகவே, நாட்டில் தேவையில்லாத பிரச்சினையை ஏற்படுத்துவதை அரசாங்கம் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

நீதித்துறையின் அதிகாரத்தை நாடாளுமன்றம் கேள்விக்குள்ளாக்கினால் பாரதூரமான விளைவுகள் ஏற்படும் என்பதை மீண்டும், மீண்டும் சுட்டிக்காட்டுகிறோம். நீதிமன்றத்தின் தீர்ப்பை ஆளும் தரப்பினர் நாடாளுமன்ற சிறப்புரிமை என்ற பெயரில் விமர்சிக்கிறார்கள், இது முற்றிலும் தவறானது என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறோம். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.