புலிகள் மீளுருவாக்கம் தொடர்பான இந்திய தரப்பு செய்தி உண்மைக்கு புறம்பானது – க.இன்பராசா

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக இந்திய நாளிதழான த ஹிந்து நாளிதழில் முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் இலங்கையில் தாக்குதல் ஒன்றை நடத்தப் போவதாக வெளியிட்ட செய்தியானது தமிழ் மக்களிடையிலும் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலி போராளிகள் மத்தியிலும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்…
நாட்டில் வலுவடைந்து வரும் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை முடக்குவதற்காக தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் இணைந்து நாட்டில் தாக்குதல் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளதாக பொய் வதந்திகளை பரப்பி வருவதாகவும் இவ்வாறான செயற்பாட்டினால் நாட்டில் தமிழ் மக்கள் உட்பட புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் ஈழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களும் பெரும் அச்சத்துடன் இருப்பதாக தெரிவித்தார்.
மேலும் அயல் நாடான இந்தியா சிங்கள அரசுக்கு எதிரான இறுதி யுத்தத்தின் போது தமிழீழப் போராட்டத்தில் அரசாங்கத்திற்கு ஆயுதபலம் மற்றும் ராணுவ பலத்தை வழங்கி எமது இனத்தை முற்றுமுழுதாக அளித்த செயற்பாடுகள் மட்டுமல்லாது தற்போது தமிழ் ஈழத்திற்காக போராடிய தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் தமது அன்றாட வாழ்வாதாரத்தை கொண்டு செல்ல முடியாமல் பெரும் கஷ்டத்தில் இருக்கின்ற இவ்வேளையில் இவ்வாறானதொரு தாக்குதல் ஒன்றினை நடத்த திட்டமிட்டுள்ளதாக இந்திய புலனாய்வுதுறை அறிக்கையொன்று வெளியிட்டுள்ளதாக குறித்த நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது இதனால் நாம் பெரும் அச்சத்துடன் இருப்பதாகவும் இவ்வாறு உண்மைக்கு புறம்பான இந்த செய்தியினை முன்னாள் போராளிகள் என்ற வகையில் தாம் வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் போராட்டத்தில் பாதிக்கப்பட்டு சமூகத்தின் மத்தியில் சுமூகமான வாழ்வினை வாழ்ந்து கொண்டிருக்கும் தருவாயில் இந்திய அரசு இவ்வாறான ஒரு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையின் மூலம் எமது நாட்டிலுள்ள சமூகம் மீண்டும் எம்மை சந்தேகக் கண்ணோடு பார்ப்பது எமக்கு மனவேதனை அளிக்கின்றது எனவும் தெரிவித்தார்.
இறுதியாக இந்திய அரசுக்கு புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் என்ற வகையில் ஒன்றை கூறிக் கொள்ள விரும்புகின்றேன் என்னிடம் ஆயுதம் இருக்கின்றது அது எல்லாவற்றையும் விட பலம்வாய்ந்த எமது உயிர் என்பதினை அவர்களுக்கு கூறிக்கொள்ள விரும்புகின்றோம் என புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.