முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பில் ரவிகரனிடம் விசாரணை.

 

விஜயரத்தினம் சரவணன்
மே.16

முள்ளிவாய்க்கால், மே-18நினைவேந்தல் நிகழ்வுதொடர்பில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்அவர்களிடமும், கரைதுறைப்பற்று பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தலைவர் இ.மயூரன் அவர்களிடமும் முல்லைத்தீவு போலீசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

அந்தவகையில் முள்ளிவாய்க்கால் மே- 18 நினைவேந்தலின்போது விடுதலைப்புலிகளின் சின்னங்கள் எவையும் பயன்படுத்நக்கூடாது என போலீசாரால் இந்த விசாரணையின்போது அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் விசாரணைகளின் பின்னர் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு போலீஸ் நிலையத்திற்கு வருமாறு, போலீஸ் பொறுப்பதிகாரியால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்து.

அதற்கமைய முல்லைத்தீவு போலீஸ் நிலையத்திற்கு வருகைதந்திருந்தோம்.

குறிப்பாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பிலே இதன்போது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

அத்தோடு இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவேந்தலினை மேற்கொள்வதற்கு பிரதமர் கூட மறுப்புத் தெரிவிக்கவில்லை என்றும், அதேபோல் தாமும் உயிரிழந்தவர்களை நினைவுகூர்வதற்கு எவ்வித இடயூறுகளையும் மேற்கொள்ளமாட்டோம் என்றும் பொலீஸ் பொறுப்பதிகாரி தெரிவித்நிருந்தார்.

இந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை எவ்வித அசம்பாவிதங்களுமின்றி நடாத்தி முடிக்கவேண்டும் எனவும் போலீஸ் பொறுப்பதிகாரியால் தெரிவிக்கப்பட்டது.

அதிலும் குறிப்பாக இந்த நினைவேந்தல் நிகழ்விலே விடுதலைப்புலிகளின் சின்னங்கள் அங்கே பயன்படுத்தப்படாமல் நினைவேந்தல் நிகழ்வை நடாத்துமாறும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

மேலும் இந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைப் பொறுத்தவரையில், கடந்த 2013ஆம் ஆண்டு காலப்பகுதியில் பலரும் தனித்தனியே, ஆங்காங்கே பல இடங்களில் நினைவேந்தலை மேற்கொண்டிருந்தனர்.

அதேவேளை கடந்த 2014, 2015, 2016, 2017ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் வடமாகாணசபையினூடாக நாம் நினைவேந்தல் நிகழ்வுகளை மேற்கொண்டிருந்தோம்.

அதனைத் தொடர்ந்து கடந்த 2018ஆம் ஆண்டு யாழ் பல்கலைக்கழக மாணவர்களும், வடமாகாணசபையும் இணைந்து இந்ந நினைவேந்நல் நிகழ்வுகளை மேற்கொண்டிருந்தது.

இவற்றின் தொடர்சியாக  இந்த நினைவேந்தல் நிகழ்விலே அரசியல் கலப்படம் இருக்கக்கூடாது என்ற நோக்குடன், இந்த நினைவேந்தல் செயற்பாடுகளை மேற்கொள்வதெற்கென ஒரு நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு உருவாக்கப்பட்டது. அவ்வாறு உருவாக்கப்பட்ட பொதுக்கட்டமைப்பினர் கடந்த 2019, 2020ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் நினைவேந்தல் நிகழ்வுகளை மேற்கொண்டிருந்தனர்.

இதேவேளை கடந்த 2021ஆம் ஆண்டு இலங்கை அரசின் அடக்குமுறை காரணமாக எமது மக்கள் முள்ளிவாய்கால் நினைவேந்தலினை மேற்கொள்ளமுடியாத நிலையும் ஏற்பட்டிருந்தது.
இவ்வாறாக பலவருடங்களாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செயற்பாடுகள் எவ்வித அசம்பாவிதங்களின்றி இடம்பெற்றுவருவதையும், எமது தமிழ் உறவுகள் மிகவும் உருக்கமாகவும், புனிதமாகவும் இந்த நினைவேந்தல் நிகழ்வுகளை மேற்கொண்டுவருவதையும் நான் போலீஸ் பொறுப்பதிகாரிக்கு நன்கு தெளிவுபடுத்தியிருந்தேன்.

மேலும் இம்முறையும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கென உருவாக்கப்பட்ட அந்த பொதுக்கட்டமைப்பினால் நினைவேந்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும். அந்ந நினைவேந்தல் செயற்பாடுகளில் எமது பங்களிப்புக்களும் இருக்கும் என்பதையும் இதன்போது தெளிவுபடுத்தியிருந்தேன் – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.