வவுனியாவில் எரிவாயு சிலிண்டர் ஏற்றிய வாகனத்தை முற்றுகையிட்ட மக்கள்!
வவுனியா குட்செட் வீதியில் அமைந்துள்ள பலநோக்கு கூட்டுறவு சங்க வளாகத்தில் வைத்து எரிவாயு சிலிண்டர்கள் ஏற்றிய வாகனத்தினை மக்கள் முற்றுகையிட்டமையினால் 30 பேருக்கு வழங்கப்படவிருந்த எரிவாயு சிலிண்டர்கள் 110 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் தெரிவருவதாவது,
வவுனியா மாவட்ட மக்கள் தமக்கு தேவையான எரிவாயுவை மதவாச்சி பூணாவை பகுதிக்கு சென்று அங்குள்ள பிரதான முகவரிடம் பெற்று வந்த நிலையில் சில சமயங்களில் கறுப்பு சந்தையிலும் அதிக விலைகொடுத்து வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில் வவுனியாவில் குடும்ப அட்டை முறையில் எரிவாயு வழங்குவதற்கு பிரதேச செயலாளர் தலைமையிலான குழுவினர் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் முடி
வடுத்திருந்தனர்.
இதனூடாக அனைத்து மக்களுக்கு கிரமமாக மாதமொருமுறை எரிவாயு கிடைப்பதற்கான முறைமையும் குடும்ப அட்டை இல்லாது வவுனியாவில் வசிப்பவர்களுக்கு வேறு திட்டத்தினூடாக எரிவாயுவை வழங்குவதெனவும் இதன்போது தீர்மானித்திருந்தனர்.
இதன் பிரகாரம் இன்றைய தினம் வவுனியாவில் 8 இடங்களில் எரிவாயுவை எரிவாயு முகவர்கள் ஊடாக வழங்குவதெனவும் அங்கு எப்பகுதி மக்களாக இருந்தாலும் குடும்ப அட்டையின் பிரகாரம் சென்று பெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன் ஒரு பகுதியாக குட்செட் வீதியில் உள்ள
பலநோக்கு கூட்டுறவு சங்கத்தில் வைத்து 30 பேருக்கு வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனினும் அதற்கு சில கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள முகவரொருவருக்கு அதிகளவான எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்பட்டமையினால் மக்கள் குழப்பமடைந்ததுடன் இது கறுப்பு சந்தை வியாபாரத்திற்கு வழிவகுக்கும் எனவும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இந்நிலையில் பலநோக்கு கூட்டுறவு சங்கத்தில் வரிசையில் நிற்கும் 110 பேருக்கு வழங்கினாலேயே வாகனத்தினை கொண்டு செல்ல அனுமதிப்போம் என தெரிவித்த நிலையில் அப்பகுதிக்கு பொலிஸ் அதிகாரிகள் பிரதேச செயலாளர் நா. கமலதாசன் ஆகியோர் வருகை தந்து மக்களுடன் சமரசம் செய்ய முற்பட்டபோதிலும் அது சாத்தியமாகாத நிலையில் அங்குள்ள அனைவருக்கு (110) சிலிண்டர்களை வழங்க சம்மதம் தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்து அங்குள்ளவர்களுக்கு எரிவாயு வழங்கப்பட்டதை அடுத்து மக்கள் முரண்படுவதனை கைவிட்டு வரிசையில் நின்று எரிவாயுவை பெற்றிருந்தனர்.
கருத்துக்களேதுமில்லை