கல்முனை, சாய்ந்தமருது பிரதேசங்களில் வீசும் துர்வாடை விவகாரம்; நீதிமன்றில் ஆஜராகுமாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு அழைப்பாணை…

(அஸ்லம் எஸ்.மௌலானா)

சாய்ந்தமருது பிரதேசத்திலும் கல்முனையின் சில பகுதிகளிலும் அண்மைக்காலமாக வீசும் துர்வாடையைக் கண்டறிந்து, உரிய நடவடிக்கை எடுக்காமைக்கு எதிராக கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கல்முனை மாநகர சபை உறுப்பினரும் சுகாதார நிலையியற் குழுவின் தவிசாளருமான சட்டத்தரணி ரொஷான் அக்தர் இவ்வழகைத் தாக்கல் செய்துள்ளார்.

இம்மனுவில் சுகாதாரத்துறை அதிகாரிகள் உட்பட 08 பேர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருக்கின்றனர்.

இன்று திங்கட்கிழமை (23) மனுவை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் அவர்கள், எதிர்வரும் 06ஆம் திகதியன்று வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு தீர்மானித்ததுடன், அன்றைய தினம் நீதிமன்றுக்கு சமூகமளிக்குமாறு, பிரதிவாதிகளுக்கு அழைப்பாணை அனுப்புமாறு உத்தரவிட்டார்.

மனுதாரரான சட்டத்தரணி ரொஷான் அக்தர் சார்பில் சட்டத்தரணிகளான ஆரிப் சம்சுதீன், எம்.எஸ்.ரஸ்ஸாக், ரைசுல் ஹாதி, ஜாவித் ஜெமீல், சுஹால் பிர்தௌஸ் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாக சாய்ந்தமருது பிரதேசத்திலும் அண்மைய நாட்களாக கல்முனையின் சில பகுதிகளிலும் மிக மோசமான துர்நாற்றம் வீசி வருகின்ற போதிலும் அத்துர்நாற்றம் எங்கிருந்து வருகின்றது என்பதை துல்லியமாகக் கண்டறியவோ அதனை இல்லாமல் செய்வதற்கோ சந்தேகத்திற்கிடமான இடங்களை முறைப்படி கண்காணிப்பு செய்து,  நடவடிக்கை எடுக்கவோ சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தவறியிருக்கிறார்கள் என குறித்த மனுவில் சுட்டிக்காட்டியிருப்பதாக சட்டத்தரணி ரொஷான் அக்தர் தெரிவித்தார்.

இத்தூர்நாற்றத்தினால் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இந்த விவகாரம் மக்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு ஒரு தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கிலேயே பொது நலன் கருதி 1979ஆம் ஆண்டு 15ஆம் இழக்க குற்றவியல் நடவடிக்கை கோவையின் பிரிவு 136 (1) (அ) பிரிவின் கீழ் இவ்வழகைத் தாக்கல் செய்திருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.