6,259 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகள் பயன்படுத்த முடியாத நிலை!

6,259 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகள் பயன்படுத்த முடியாத நிலை!
மருந்துகளை உரிய முறையில் களஞ்சியப்படுத்தாமையின் காரணமாக 2011ஆம் ஆண்டு தொடக்கம் 2020ஆம் ஆண்டு வரையில் 6,259 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகள் பயன்படுத்த முடியாத நிலைக்கு உள்ளாகின.
இந்த மருந்துகள் பயன்பாட்டுக்குப் பொருத்தமல்லாதவை என அடையாளம் காணப்படும்போது 99 வீதமானவை நோயாளிகளுக்கு அவை வழங்கப்பட்டுள்ளமை அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தரமற்ற (quality fail) மருந்துகளுக்கான செலவினை வழங்குநர்களிடமிருந்து அறிவிட்டுக் கொள்ள முடியாமல் போயுள்ளது.
ஔடதங்களின் உறுதித்தன்மை காணப்படும் வகையில், உரிய தரத்தில் அவற்றை களஞ்சியப்படுத்த முடிந்தளவு விரைவில் வசதிகளை ஏற்படுத்துமாறும் கோபா குழு விதப்புரை வழங்கியுள்ளது.
மருந்து வழங்கல் பிரிவுக்குச் சொந்தமான களஞ்சியங்களில் வெப்பநிலையை முறையாகப் பேணிவராமை மற்றும் மருத்துவ வழங்கல்கள் மத்திய ஒளடத களஞ்சியத்தினதும் வைத்தியசாலைகளினதும் நடைக்கூடங்களில் வைக்கப்பட்டுள்ளமையையும் குழு அவதானித்துள்ளது.
மருந்துகள் கிடைத்தவுடன் அவை தரமற்றவையென அடையாளம் காண்பதற்கான முறையியலொன்று காணப்படின் அதற்கான நட்டத்தினை வழங்குனர்களின் உத்தரவாதத் தொகையிலிருந்து அறவிட்டுக் கொள்ள முடியுமெனவும், அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் மூலமாக 60 வகையான மருந்துகளின் தரத்தினைப் பரிசோதனை செய்ய முடிந்தால் இந்த நிலைமையை ஓரளவிற்கேனும் தவிர்த்துக் கொள்ள முடியும் என அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டினார்.
மருத்துவ வழங்கல் பிரிவானது தரமற்ற மருந்துகள் அல்லது மருத்துவ வழங்கல்களுக்கான செலவுகளை அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்திடமிருந்து அறவிடுவதற்குப் பதிலாக உரிய வழங்குநர்களிடமிருந்து அறவிட்டுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் செயலாளருக்குப் பரிந்துரைக்கப்பட்டது.
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத் தொடருக்கான அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் அறிக்கையை அதன் தலைவர் கௌரவ (பேராசிரியர்) திஸ்ஸ விதாரண கடந்த 20ஆம் திகதி சமர்ப்பித்திருந்தார். அந்த அறிக்கையிலேயே இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
2021.08.04 தொடக்கம் 2021.11.19 வரையான காலப்பகுதியில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிறுவனங்கள் குறித்த விடயங்கள் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
May be an image of food

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.