நுவரெலியா – நானுஓயா வாகன விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு கொழும்பு தேர்ஸ்டன்கல்லூரியால் நிதியுதவி

(அந்துவன்)

நுவரெலியா – நானுஓயா, ரதல்ல குறுக்கு வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரியால் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

மாணவர்கள், பழைய மாணவர்கள் உள்ளிட்ட கல்லூரி சமூகம் இணைந்தே இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

கொழும்பு, தேர்ஸ்டன் கல்லூரி மாணவர்கள் சுற்றுலா வந்த பஸ்ஸொன்று நானுஓயா, ரதல்ல – குறுக்கு வீதி பகுதியில் வைத்து வேன் மற்றும் ஆட்டோவை மோதித் தள்ளியதில் வேனில் பயணித்த அறுவரும், ஆட்டோவில் இருந்த அதன் ஓட்டுநரும் உயிரிழந்தனர்.

வேனில் பயணித்தவர்களில் படுகாயமடைந்த சிறுமியொருவர் நுவரெலியா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார். அவரின் எதிர்கால நடவடிக்கைக்காக வங்கியில் 8 லட்சம் ரூபா வைப்பிலிடப்பட்டுள்ளது.  விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தார், சிறுமிக்கான கொடுப்பனவு உட்பட இந்த உதவித்திட்டத்துக்காக தேர்ஸ்டன் கல்லூரியால் 17 லட்சம் ரூபா செலவளிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கொலபொடவிடம் மேற்படி உதவித்தொகை, கல்லூரி அதிபரால், நுவரெலியா மாவட்ட செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டுள்ளது.

கண்டி போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர், நுவரெலியா பொலிஸ் தலைமையகத்தின் பிரதானி, நானுஓயா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கல்லூரியின் பழைய மாணவர் சங்க பிரதிநிதிகள் ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.