ஒன்றரை வயது குழந்தையை கொலை செய்ய முயற்சித்த தாய்! சிசிடிவி கமராவில் சிக்கிய காட்சி

கணவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாக கணவனை பழிவாங்க தாய் ஒருவர் தனது ஒன்றரை வயது குழந்தையை இறால் தொட்டிக்குள் தள்ளியதாக உடப்புவ பொலிஸார் நேற்று தெரிவித்துள்ளனர்.

உடுப்புவ, கட்டகடுவ பிரதேசத்தில் உள்ள இறால் பண்ணையில் பணிபுரியும் தொழிலாளி ஒருவரின் மனைவி, தனது ஒரு வயது மற்றும் 6 மாதமுடைய பெண் குழந்தையை இவ்வாறு இறால் தொட்டியில் தள்ளியுள்ளயுள்ளார் எனத் தெரியவந்துள்ளது.

குறித்த பெண் குழந்தையை இறால் தொட்டியின் அருகே அழைத்துச் சென்று பின்னர் இறால் தொட்டிக்குள் தள்ளியுள்ளமை அங்கிருக்கும் சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளமை பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த பெண் குழந்தையை இறால் தொட்டிக்குள் தள்ளிவிட்டு பின்னர் எதுவும் தெரியாதது போன்று குழந்தையை தேடும் காட்சியும் பதிவாகியுள்ளது.

மேலும், இதனை அவதானித்த இறால் பண்ணையில் பணிபுரியும் மற்றொரு தொழிலாளி இறால் தொட்டியில் குழந்தை போராடுவதைக் கண்டு தொட்டியில் குதித்து காப்பாற்றியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து மீட்கப்பட்ட குழந்தை உடனடியாக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின்னர் புத்தளம் வைத்தியசாலையில் இருந்து குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது குழந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக குருநாகல் போதனா வைத்தியசாலையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

குழந்தையை இறால் தொட்டிக்குள் தள்ளிய பெண்ணுக்கு கணவருடன் சிறிது காலமாக குடும்பத்தகராறு இருந்தமை பொலிஸ் விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த பெண் கொபேகனே பிரதேசத்தில் வசிப்பவர் எனவும் குடும்ப தகராறு தொடர்பில் கொபேகனை பொலிஸாரிடம் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இருவரும் குழந்தையுடன் நிம்மதியாக வாழுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து இருவரும் குழந்தையுடன் கட்டகடுவ இறால் பண்ணையில் உள்ள வாடி ஒன்றில் வசித்து வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கணவனுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கணவனை பழிவாங்குவதற்காக குழந்தையை இறால் தொட்டிக்குள் தள்ளியுள்ளமை தெரியவந்துள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பில் 20 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயை உடப்பு பொலிஸார் கைது செய்து புத்தளம் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்த உள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.