களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்குத் தங்க விருது

மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்குத் தங்க விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் நாடளாவிய ரீதியில் இலங்கை தரமுகாமைத்துவ நிறுவனத்தால் கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் 69 நிறுவனங்களிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட விண்ணப்பத்தின் பிரகாரம் 400 இற்கும் மேற்பட்ட குழுக்களுக்கிடையே போட்டி நடத்தப்பட்டு வழங்கப்பட்ட விருது வழங்கும் விழாவில் மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்குத் தங்க விருது வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இதன்போது களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் திட்டமிடல் மற்றும் தரமுகாமைத்துவ பிரிவு வைத்தியரும், களுதாவளை ஆரம்ப மருத்துவச் சிகிச்சைப் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரியுமான குகதாசன் மயூரேஷன் தலைமையிலான குழுவில் தாதிய பரிபாலகர் சுகிர்தராணி ஜெயரட்ணம், தொற்று நோய் கட்டுப்பாட்டுப் பிரிவின் பொறுப்பு தாதிய உத்தியோகஸ்தர் சுதர்ஜினி ஜீவன் மற்றும் தரமுகாமைத்துவ பிரிவு பொறுப்பு தாதிய உத்தியோகஸ்தர் தனுஸ்சா பிரசாந் மற்றும் சிற்றூழியர் மேற்பார்வையாளர் ஜெயசீலன் கிரிதரன் ஆகியோர் மேற்படி வைத்தியசாலை சார்பாகக் கலந்து கொண்டு தங்க விருதைப் பெற்றுக் கொண்டனர்.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய அதிகாரி குணசிங்கம் சுகுணனின் ஆலோசனையும், வழிகாட்டுதலின் பெயரில், களுவாஞ்சிகுடி ஆதார வைத்திய அத்தியட்சகர் க.புவனேந்திரநாதனின் தலைமைத்துவத்தின் கீழ், திட்டமிடல் மற்றும் தரமுகாமைத்துவ பிரிவு வைத்திய அதிகாரி குகதாசன் மயூரேஷன் விளக்கக்காட்சிப்படுத்தியுள்ளார்.

தொற்று நோய் கட்டுப்பாட்டுப் பிரிவின் பொறுப்பு தாதிய உத்தியோகஸ்தர் சுதர்ஜினி ஜீவன், அயராத முயன்று செய்த கழிவு முகாமைத்துவ ஆய்வைக் கொண்டு இவ்விருதுக்காக விண்ணப்பிக்கப்பட்டிருந்தது.

இந்த விருதுக்காக அரச மற்றும் தனியார் அமைப்புக்களிலிருந்து விண்ணப்பித்த நூற்றுக்கு மேற்பட்ட நிறுவனங்களுள் சுகாதாரத் துறைசார்ந்து விண்ணப்பித்தவர்களுள் களுவாஞ்சிகுடி ஆதர வைத்தியசாலைக்கு மாத்திரமே இந்த தங்க விருது கிடைக்கப் பெற்றுள்ளமை சிறப்பம்சமாகும்.

இந்த விருது கிடைத்ததற்கு சகல வழிகளிலும் ஒத்தாசை புரிந்த மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய அதிகாரி கு.சுகுணன் களுவாஞ்சிகுடி ஆதார வைத்திய அத்தியட்சகர் க.புவனேந்திரநாதன், உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியைத் தெரிவிப்பதாக தரமுகாமைத்துவ பிரிவு வைத்திய அதிகாரி கு.மயூரேஷன் இதன்போது தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.