கல்முனையில் இளம் கண்டுபிடிப்பாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான நிகழ்வு!

நூறுல் ஹுதா உமர்
இந்த ஆண்டுக்கான இளம் கண்டுபிடிப்பாளர்களை (Junior inventor of the year (JIY) 2022) தேர்ந்தெடுப்பதற்கான நிகழ்வு கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) கூட்ட மண்டபத்தில் Institution of Engineers, Sri Lanka (IESL) Eastern Chapter அமைப்பின் தவிசாளர் தென்கிழக்கு பல்கலைகழக பொறியியல் பீடத்தின் முன்னாள் பீடாதிபதி சிரேஷ்ட விரிவுரையாளர் பொறியியலாளர் கலாநிதி எஸ்.எம். ஜுனைடீன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் அம்பாறை மாவட்ட உதவி பொது முகாமையாளர் பொறியியலாளர் கே.வினோதன் கலந்து கொண்டு புதிய இளம் கண்டுபிடிப்பாளர்கள் முன்னிலையில் உரையாற்றினார்.
நிகழ்வில் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மட்டக்களப்பு மாவட்டங்களைச்  சேர்ந்த 32 மாணவர்கள் தங்களது புத்தாக்கங்களை காண்பித்து அவைகளின் செயற்பாடுகள் தொடர்பிலும் குறித்த ஆக்கங்களை எவ்வாறு உருவாக்கினார்கள்; என்ற தகவல்களையும், அதற்கு பின்புலமாக அமைந்த காரணிகள் தொடர்பிலும் விளக்கமளித்தனர்.
இளம் கண்டுபிடிப்பாளர்களின் திறமைகளை பாராட்டிய அமைப்பின் மத்தியஸ்த குழுவினர் குறித்த புத்தாக்கங்களை மேலும் மெருகூட்டகூடிய ஆலோசனைகளையும் வழங்கினர். கல்வி அமைச்சின் ஒத்துழைப்புடன் Institution of Engineers, Sri Lanka (IESL) அமைப்பினால் 12 தொடக்கம்  19 வரையான வயதுடைய இளைஞர்களின் ஆற்றல் மற்றும் புத்தாக்கதிறனை மேம்படுத்தும் முகமாக இடம்பெற்றுவரும் இவ்வாறான நிகழ்வுகள் புதிய கண்டுபிடிப்பாளர்களை இனம்காட்டி வருகின்றன.
நிகழ்வின்போது பொறியியலாளர்களான எம்.ஐ.நஸீர், எம்.எம்.எம்.ஏ. பாயிக், ஏ.எம்.ஹய்க்கல், ஏ.பிரிந்தான், கலாநிதி எம்.என்.அஜ்மல் ஹினாஸ், ஏ.ஜி.சாமில் சப்றி, ஐ.எல்.எம்.சப்ரி,எம்.எப்.எம் இஸ்க்கி, இசட்.ஏ.எம். அஸ்மிர், எம்.எஸ்.எம்.நவாஸ், எம்.கஜினி  உள்ளிட்ட அமைப்பின் பொறியியலாளர்கள் பலர் அங்கு பிரசன்னமாகியிருந்தனர்.
இன்றைய தினத்தில் பங்குகொண்ட மாணவர்களின் ஆக்கங்களில் தெரிவு செய்யப்படும் ஆக்கங்கள் தேசிய மட்ட போட்டிகளுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.