இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள இந்தியா வழங்கிய நிதியுதவி உயிர் கொடுத்ததற்கு சமமாகும் – வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி

லங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு இந்தியா வழங்கிய உதவி ஏனைய நாடுகள் வழங்கிய உதவிகளை விட பலம் மிக்கதாகும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நேற்று முன்தினம் (4) இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெயசங்கரை சந்தித்து கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாங்கள் தற்போது பணவீக்கத்தை கட்டுப்படுத்திக்கொண்டிருக்கிறோம். ரூபாயின் பெறுமதி ஸ்திரமான நிலைக்கு வந்திருக்கிறது.

கடந்த காலங்களில் இருந்து வந்த வரிசை தற்போது இல்லை. சுற்றுலா பயணிகள் மீண்டும் இலங்கைக்கு வர ஆரம்பித்திருக்கின்றனர். இலங்கையர்கள் சட்ட ரீதியில் நாட்டுக்கு பணம் அனுப்பி வருகின்றனர். அதன் பிரகாரம், சிறந்த சுற்றுச்சூழல் அமைந்து, ஸ்திரமான நிலை ஏற்பட்டுள்ளது.

அதேபோன்று சர்வதேச நாணய நிதியத்தின் விரிவான கடன் வசதிகள் இந்த மாதம் இறுதியில் கிடைக்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். இதன் மூலம் நாங்கள் மீண்டும் நெருக்கடி நிலைமையில் இருந்து மீள முடியும் என நம்புகிறோம்.

நாங்கள் நெருக்கடியில் இருந்து ஸ்திரமான மற்றும் மீளும் நிலைக்கு வருவதற்கு இந்தியா நமது உதவியாளராக பாரியளவில் உதவி செய்தது. ஏனைய நாடுகள் இலங்கைக்கு வழங்கிய உதவிகளுடன் பார்க்கும்போது இந்தியா வழங்கிய உதவி விசாலமானது.

குறிப்பாக, நாங்கள் மிகவும் பொருளாதார நெருக்கடியில் இருந்தபோது, நாங்கள் இருந்த நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு இந்தியா எமக்கு 3.9 பில்லியன் அமெரிக்க டொலர் வழங்கியமை எமக்கு உயிர் வழங்கியதற்கு சமமானதாகும். அதற்காக நாங்கள் இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

அதேபோன்று சட்ட ரீதியாக இந்திய பணத்தில் கொடுக்கல் -வாங்கல் மேற்கொள்வது தொடர்பாக தற்போது நாங்கள் கலந்துரையாடி வருகின்றோம். இதன் மூலம் இரண்டு நாடுகளினதும் பொருளாதார நிலை மேலும் வலுவடையும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.