வாக்கெடுப்பு திகதி நாளை அறிவிக்கப்பட வேண்டும் – ஜி.எல்.பீரிஸ்

நிதி விடுவிப்பு தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவுக்கு அமைய திறைசேரியின் செயலாளர் செயற்பட வேண்டும்.

நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அவர் செயற்பட்டால் அவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தாக்கல் செய்வோம் என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்தார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று இடம்பெறும் கூட்டத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் கலந்து கொள்வோம். உள்ளூராட்சிமன்றத் தேர்தல் வாக்கெடுப்பு தினத்தை ஆணைக்குழு இன்று நிச்சயம் அறிவிக்க வேண்டும். திகதி அறிவிப்பை தொடர்ந்து நீடிப்பது அநாவசியமற்றது எனவும் குறிப்பிட்டார்.

நாவல பகுதியில் உள்ள சுதந்திர மக்கள் சபை காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு –

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் உறுதியான தீர்மானத்தை அறிவிக்கும் வகையில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை விசேட பேச்சு இடம்பெறவுள்ளது.

நிதி விடுவிப்பு தொடர்பில் திறைசேரியின் செயலாளருடன் தொடர்ந்து பேச்சில் ஈடுபடுகின்றமை காலத்தை வீணடிக்கும் செயல் என்பதை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவுறுத்தியுள்ளோம்.

நிதி விவகாரத்தில் திறைசேரியின் செயலாளர் அமைச்சரவை தீர்மானம்,சுற்றறிக்கை ஆகியவற்றுக்கு அமைய இனி செயற்பட முடியாது. உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடவடிக்கைகளுக்கு அரசாங்கத்தால் ஏற்படுத்தப்பட்ட தடைகளை உயர்நீதிமன்றம் தகர்த்தியுள்ளது.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடவடிக்கைகளுக்கு நிதி விடுவிப்பைத் தடுக்கும் செயற்பாடுகளுக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆகவே திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன உயர்நீதிமன்றத்தின் கட்டளைக்கு அமைய செயற்பட வேண்டும்.

திறைச்சேரி செயலாளர் உயர்மட்ட ஆலோசனைக்கு அமைய செயற்பட்டு நிதி விடுவிப்பைத் தொடர்ந்து தாமதப்படுத்தினால் அது நீதிமன்ற அவமதிப்பாகக் கருதப்படும்.

நீதிமன்ற தீர்மானத்துக்கு எதிராகச் செயற்படுகின்றமை சிறை செல்ல கூடிய பாரதூரமான குற்றம். அரசியல்வாதிகள் இருவர் நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டால் சிறை சென்றுள்ளார்கள்.

உயர்நீதிமன்றத்தின் அறிவிப்புக்கு எதிராக திறைசேரி செயலாளர் செயற்பட்டால் அவருக்கு எதிராக நீதிமன்ற வழக்குத் தாக்கல் செய்வோம். எமக்கு நபர் முக்கியமல்ல, அனைவரும் நீதிமன்ற தீர்ப்பிற்கு அமைய செயற்பட வேண்டும்.

தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று இடம்பெறும் கூட்டத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் கலந்துக் கொள்வோம். உள்ளூராட்சிமன்றத் தேர்தல் வாக்கெடுப்பு தினத்தை ஆணைக்குழு இன்று நிச்சயம் அறிவிக்க வேண்டும். திகதி அறிவிப்பைத் தொடர்ந்து நீடிப்பது அநாவசியமானது. – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.