நெருக்கடிகளிலிருந்து நாட்டை மீட்கும் இயலுமை பொதுஜன பெரமுனவிற்கு மாத்திரமே உள்ளது – சாகர காரியவசம்

நாட்டிலுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காணக் கூடிய இயலுமை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்திற்கு மாத்திரமே காணப்படுகிறது. இவ்விடயம் தொடர்பில் மக்கள் அறிவு பூர்வமாக சிந்தித்து செயற்பட வேண்டும் என்று பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

பத்தரமுல்லையிலுள்ள பொதுஜன பெரமுன தலைமை அலுவலகத்தில் இன்று (07) செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

பொருளாதார நெருக்கடிகளிலிருந்து நாட்டை மீட்கக் கூடிய கட்சி எது என்பதை மக்கள் அறிவுடன் சிந்திக்க வேண்டிய காலம் இதுவாகும். இன்று நாட்டில் காணப்படும் பிரதான பிரச்சினை பொருளாதார பிரச்சினை என்பதை அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியினர் தனவந்தர்களை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார வேலைத்திட்ட ங்களையே கொண்டுள்ளனர். அதே போன்று ஜே.வி.பி. மாக்சிஸ பொருளாதாரக் கொள்கையையே கொண்டுள்ளனர்.

இந்த இரண்டையும் சாராத நடுநிலைமையான பொருளாதாரக் கொள்கையே எமது நாட்டுக்கு பொறுத்தமானதாகும். அதற்கேற்ப சிறந்த பொருளாதாரக் கொள்கையுடன் நாட்டை நிர்வகிக்கக் கூடிய திறன் கொண்டவர்கள் பொதுஜன பெரமுனவிலேயே காணப்படுகின்றனர்.

ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் 30 வருட கால உள்நாட்டு யுத்தம் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டது. கடுமையான யுத்த காலங்களிலும் கூட பொருளாதாரம் முறையாக நிர்வகிக்கப்பட்டது. எனவே தான் அதற்கான இயலுமை எமக்கு மாத்திரமே காணப்படுகிறது என்பதை உறுதியாகக் குறிப்பிடுகின்றோம்.

பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் பொதுஜன பெரமுனவின் தவசாளராக செயற்படுகின்றாரா இல்லையா என்பதை அவர் மாத்திரமே அறிவார். எனவே அது தொடர்பில் இனியும் நாம் கருத்துக்களை வெளியிட விரும்பவில்லை. அவர் மனசாட்சியின் பிரகாரம் சிந்தித்து செயற்பட வேண்டும் என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.