மட்டக்களப்பில் இறந்தவர்கள் பெயரில் போலி ஆவணங்கள் மூலம் காணி மாபியாக்கள் காணி அபகரிப்பு… (ஈ.பி.டி.பி யின் மட்டக்களப்பு ஒருங்கிணைப்பாளர் ச.மயூரன்)

(சுமன்)

இறந்தவர்கள் எழுந்து வந்து உறுதி எழுதிக் கொடுக்கும் விடயம் எல்லாம் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெறுகின்றது. ஒரு சில காணி மாபியாக்கள் இறந்தவர்களின் பெயரில் போலி ஆவணங்களைத் தயார் செய்து எமது இனத்தவர்களையே பினாமிகளாகப் பயன்படுத்தி நாளுக்கு நாள் காணிகளை அபகரிக்கின்றனர் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சதாசிவம் மயூரன் தெரிவித்தார்.

இன்றைய தினம் மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது மாவட்டத்தில் பல வருட காலமாக அரச காணிகள், எல்.ஆர்.சி காணிகள் மற்றும் சில தனியார் காணிகளை காணி மாபியாக்கள் நாளுக்கு நாள் கள்ள உறுதிகளையும், போலியான ஆவணங்களையும் தயாரித்து அபகரிப்பு செய்வது நீடித்து வருகின்றது. அதற்கான சில ஆதாரங்களை ஊடகம் வாயிலாக மக்களுக்கு தெரியப்படுத்தும் நோக்குடனேயே இன்றைய இந்த ஊடக சந்திப்பினை மேற்கொண்டுள்ளோம்.

காணி அபகரிப்புகள் சம்மந்தமாக பல ஆதாரங்கள் எங்களிடம் இருக்கின்றன. அதில் ஒரு சில ஆதாரங்களை இன்று வெளியிட இருக்கின்றோம். இறந்தவர்கள் உயிர்த்தெழுந்து வந்து காணிகளை விற்கும் நிலை மட்டக்களப்பில் தான் இடம்பெறுகின்றது. 1983ம் ஆண்டு இறந்த ஆறுமுகம் சுப்பையா என்பவர் மட்டக்களப்பு புதுநகரைச் சேர்ந்த ஜெயானந்தம் நிரஞ்சனகுமார் என்பவருக்கு 2017ம் ஆண்டு உறுதி எழுதிக் கொடுத்திருக்கின்றார். இதன்மூலம் ஏறாவூர்ப்பற்று சவுக்கடி கிராமத்தில் 20 ஏக்கர் காணி விற்கப்பட்டுள்ளது. நாங்கள் அறிந்த வகையில் இறந்த நபர் உயிர்த்தெழுந்தது இயேசு கிறிஸ்து ஒருவரே என பைபிலில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் இங்கு 1983ம் ஆண்டு இறந்த நபர் 2017ம் ஆண்டு உயிர்த்தெழுந்து வந்து எழுதிக் கொடுத்துள்ளார். இதன் உறுதி இலக்கம் 2637. ஆனால், இந்த உறுதியானது எமது மாவட்ட காணிப் பதிவகத்தில் இல்லை. இவ்வாறான அநேக கேள்விகளுக்கு மத்தியில் நாங்கள் இருக்கின்றோம்.

அதே போன்று இன்னுமொரு உறுதி செல்வராசா என்பவர் 2020ம் ஆண்டு இறந்துள்ளார். 2021ம் ஆண்டு சுஜித்தா இந்திரகுமார் என்பவரின் பெயருக்கு சுமார் 30 ஏக்கர் காணியினை எழுதிக் கொடுத்துள்ளார். இதுவெல்லாம் எவ்வாறு சாத்தியம். இறந்த நபர்களைக் கொண்டு, அவர்களின் போலியான கையொப்பங்கள் இடப்பட்டு போலியான ஆவணங்களைத் தயார் செய்துள்ளனர். அதேபோன்று இந்த சுஜித்தா இந்திரகுமார் என்பவர் இந்த 30 ஏக்கர் காணியை சவுக்கடி கிராமத்தைச் சேர்ந்த ராதாகிருஸ்ணன் கலையினன் என்பவருக்கு விற்றுள்ளார்.

இவ்வாறு மட்டக்களப்பு மாவட்டத்தில் போலி ஆவணங்களைத் தயாரித்து அநேகமான காணிகள் சகோதர இனத்தைச் சேர்ந்த ஒரு சில காணி மாபியாக்கள் எமது இனத்தவர்களை பினாமிகளாகப் பயன்படுத்தி நாளுக்கு நாள் அபகரிக்கப்பட்டு வருகின்றன. எனவே இவ்வாறு போலி ஆவணங்களைத் தயாரிக்கும் காணி மாபியாக்களை இனங்கண்டு அவர்களுக்குத் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.

அந்தவகையில் கடந்த வாரம் கொழும்பு குற்றவியல் திணைக்களத்திற்கு இவ்வாறான ஆதாரங்கள் சகலதையும் சமர்ப்பித்துள்ளேன். அதேபோன்று எமது மாவட்ட அரசாங்க அதிபருக்கும் இதனை சமர்ப்பிக்கவுள்ளோம்.

இந்த காணி மாபியாக்களின் காணி சுரண்டல்கள் உடனடியாக இந்த மாவட்டத்தில் இருந்து நீக்கப்பட வேண்டும். வாகரை தொடக்கம் துறைநீலாவணை வரை பல காணிகள் இன்று பறிபோய்க்கொண்டிருக்கின்றன. ஒரு சில அமைச்சர்களின், எமது மாவட்டத்தின் இராஜாங்க அமைச்சர்கள், சில பாராளுமன்ற உறுப்பினர்களின் பினாமிகளின் பெயர்களிலும் காணிகள் இருக்கின்றன. காணி மாபியாக்கள் பல புனைப்பெயர்களிலேயே எமது பிரதேசங்களைக் அபகரித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இது எங்களது முதலாம் கட்ட ஊடக சந்திப்பு எங்களிடம் இன்னும் அநேகமான ஆதாரங்கள் இருக்கின்றன. மேலும் பல ஆதாரங்களைத் திரட்ட வேண்டியும் இருக்கின்றது. அவற்றையெல்லாம் எடுத்து விட்டு மீண்டும் எமது மக்களுக்கு அவற்றை வெளிப்படுத்துவோம். அதன்போது எவருமே கேட்டிருக்க முடியாத புனைப்பெயர்கiளைக் கொண்டு அழைக்கப்படும் எமது பிரதேச இடங்களுக்கான ஆதாரங்களையும் மிக விரைவில் வெளிப்படுத்துவோம் என்று தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.