மட்டக்களப்பு மாநகரசபை எல்லைக்குட்பட்ட 18 வீதமான உணவகங்களிலே தரம் குறைவான உணவுகள் வழங்கப்படுகின்றன…

சுமன்)
தற்போது ஏற்பட்டுள்ள மின்கட்டண அதிகரிப்பால் மாநகரசபை எல்லைக்குட்பட்ட உணவகங்களில் தயாரிக்கப்படுகின்ற உணவுகளின் சுகாதார நிலைமைகள் பாதிப்புக்குள்ளாகியிருப்பது தொடர்பில் ஆராயப்பட்ட போது 18 வீதமான உணவகங்களிலே தரம் குறைவான உணவுகள் வழங்கப்படுவதாக அறியப்பட்டுள்ளது என மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினரும், சுகாதாரக் குழுவின் தலைவருமான சிவம் பாக்கியநாதன் தெரிவித்தார்.

இன்றைய தினம் இடம்பெற்ற மட்டக்களப்பு மாநகரசபையின் 71வது சபை அமர்வில் நிலையியற் குழுக்களில் ஒன்றான சுகாதாரக் குழுவின் பரிந்துரைகள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போது மின்கட்டணம் அதிகரித்திருக்கின்ற நிலையில் மாநகரசபை எல்லைக்குட்பட்ட உணவகங்களில் தயாரிக்கப்படுகின்ற உணவுகளின் சுகாதார நிலைமைகள் பாதிப்புக்குள்ளாகியிருப்பதாக பல்வேறுபட்ட தரப்பினால் முறைப்;பாடுகள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் அது தொடர்பில் ஆராயப்பட்ட போது 18 வீதமான உணவகங்களிலே தரம் குறைவான உணவுகள் வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. அது தொடர்பிலான விடயங்களைக் கருத்திற் கொண்டு சுகாதாரக் குழுவினால் பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன.

அதுமட்டுமல்லாது உணவகங்களிலே சுகாதார முறையற்ற விதத்திலும், மனிதனுக்கு ஒவ்வாத முறையிலும் உணவுப் பொருட்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் திடீர் பரிசோதனை நடவடிக்கைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

தற்போது மழை இல்லாத காலத்திலும் காலநிலை மாற்றம் காரணமாக மழை பெய்து கொண்டிருக்கின்றது. இதனால் டெங்கு அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி கரிரியாலயம் தகவல்களைத் தெரிவிக்கின்றது. இதன்படி ஒரு வாரத்தில் மாவட்ட ரீதியில் நூறு பேர் பாதிப்புக்குள்ளாவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டெங்கு தொடர்பில் பல்வேறு விழிப்புணர்வுகளை மாநகரசபை உட்பட சுகாதாரப் பிரிவினர் செய்திருந்தாலும் அது மக்கள் மத்தியில் எந்தளவு சென்றடைந்திருக்கின்றது என்றால் அது பூச்சியமாகவே இருக்கின்றது.

இருப்பினும் எமது மாநகரசபையூடாக டெங்கு ஒழிப்பு பிரிவிற்கு ஆளணிகள் வழங்கப்பட்டுள்ளதுடன், புகை விசுறுவதற்கான மருந்துகளும் வழங்கப்பட்டு வருகின்றன. எத்தனை விடயங்கள் இடம்பெற்றாலும் டெங்கு பெருக்கமற்ற வளையம் ஒன்று உருவாகும் வரை இதனைக் கட்டுப்படுத்த முடியாது. எவ்வளவு தான் புகை விசிறினாலும் புகை விசிறப்பட்ட இடத்தில் இருந்து 100 மீட்டருக்கு அப்பால் மாத்திரம் நுளம்பு அப்புறப்படுத்தப்படுமே தவிர அதற்கப்பால் ஒன்றும் செய்ய முடியாது. எனவே டெங்கு பெருக்கும் இடங்களை இல்லாமல் செய்வதே இதற்கான வழி. இதனை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என சுகாதாரத் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

அடுத்து மாநகரசபை எல்லைக்குள் இருக்கும் கட்டாக்காலி நாய்களின் அட்டகாசம் அதிகரித்துக் காணப்படுகின்றது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் எமது சுகாதாரப் பிரிவின் மூலம் அந்த நாய்களுக்கு ஊசி ஏற்றுதல் மற்றும் கருத்தடை செய்தல் போன்ற விடயங்களைச் செய்வதன் மூலம் இவற்றைக் கட்டுப்படுத்த முடியும்.

கவனிப்பாரற்று பற்றைக் காடுகளாகக் கிடக்கும் காணிகளை அடையாளம் கண்டு அவற்றை மாநகரசபை கையகப்படுத்தி துப்பரவு செய்தல், வீதி வடிகாண்களில் நீர் தேங்கா வண்ணம் அவற்றைச் சீர்படுத்தல், கள்ளியங்காடு சேமக்காலையில் அமைக்கப்பட்டுள்ள மின்தகன சாலையை துரித கதியில் மக்கள் பாவனைக்குக் கையளித்தல் போன்ற மேலதிக விடயங்கள் தொடர்பில் எமது சுகாதாரக் குழுவில் கலந்துரையாடப்பட்டு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.