சிறப்புரிமை மீறல் தொடர்பான பிரச்சினையை இரத்துச் செய்யுங்கள் – வீரசுமன வீரசிங்க

உயர்நீதிமன்றம் பிறப்பித்த இடைக்காலத் தடையுத்தரவால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது என ஆளும் தரப்பினர் முன்வைத்த சிறப்புரிமை மீறல் தொடர்பான பிரச்சினையை இரத்துச் செய்யுமாறு சபாநாயகரிடம் கூட்டாக வலியுறுத்தவுள்ளோம் என நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்க தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு –

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடவடிக்கைகளுக்குத் தேவையான நிதி விடுவிப்பு தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கிய இடைக்காலத் தடையுத்தரவால் நாடாளுமன்றம் பலப்படுத்தப்பட்டுள்ளது. நிறைவேற்று அதிகாரம் சட்டவாக்கத்தை பலவீனப்படுத்துவதை உயர்நீதிமன்றம் தடுத்துள்ளது.

உயர்நீதிமன்றத்தின் தடையுத்தரவால் நாடாளுமன்றத்தின் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக ஆளும் தரப்பு உறுப்பினர்களான பிரேம்நாத் சி.தொலவத்தே,செஹான் சேமசிங்க முன்வைத்துள்ள சிறப்புரிமை மீறல் தொடர்பான பிரச்சினை முற்றிலும் வெறுக்கத்தக்கது.

சிறப்புரிமை மீறல் தொடர்பில் முன்வைக்கப்பட்ட பிரச்சினை தொடர்பில் நாடாளுமன்ற சிறப்புரிமை மற்றும் ஒழுக்கவியல் தொடர்பான குழு ஒரு தீர்மானத்தை எடுக்கும் வரை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள இடைக்காலத் தடையுத்தரவை அடிப்படையாக கொண்டு முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை இடைநிறுத்துமாறு நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க சபாநாயகரிடம் வலியுறுத்தியுள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது.

மேற்படி சிறப்புரிமை தொடர்பான பிரச்சினையை சிறப்புரிமை மற்றும் ஒழுக்கவியல் தொடர்பான குழுவிற்கு சமர்ப்பிக்காமல், இரத்துச் செய்யுமாறு சபாநாயகரிடம் வலியுறுத்தவுள்ளோம். நீதிமன்றத்தின் தீர்மானத்தை சவாலுக்குட்படுத்தும் செயற்பாடுகளை ஆளும் தரப்பினர் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

சபாநாயகர் நாடு திரும்பியதும் சகல எதிர்க்கட்சி தலைவர்களையும் ஒன்றிணைத்து அவருடன் முக்கிய பேச்சில் ஈடுபடத் தீர்மானித்துள்ளோம். உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடவடிக்கைக்கான நிதி விடுவிப்பு பிரேரணையைக் கொண்டு வரத் தீர்மானித்துள்ளோம். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.