நீதிமன்றத்தின் தடையுத்தரவை சவாலுக்குட்படுத்தும் நோக்கம் கிடையாது – நிதி இராஜாங்க அமைச்சர்

உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்காக 2023 ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தில் உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட மதிப்பீட்டு தொகையை மீள் பரிசீலனை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் அறிவுறுத்தியுள்ளோம்.

நீதிமன்றத்தின் இடைக்கால தடையுத்தரவை சவாலுக்கு உட்படுத்தும் நோக்கம் அரசாங்கத்துக்குக் கிடையாது என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு –

உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்குத் தேவையான நிதி தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு கடந்த ஆண்டு ஜூலை மாத காலப்பகுதியில் முன்வைத்த மதிப்பீட்டு செலவுக்கும் தற்போதைய செலவுகளுக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன. ஆகவே, செலவு தொகையை மறுசீரமைக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் குறிப்பிட்டுள்ளோம்.

பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்கும். நிதி நெருக்கடிக்கு மத்தியில் உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கு நிதி ஒதுக்கினால் அல்லது நாணயம் அச்சிட்டால் பணவீக்கம் மீண்டும் உயர்வடையும், பொருளாதார நெருக்கடி மீண்டும் தீவிரமடையும்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு இம்மாத இறுதிக்குள் கிடைக்கப் பெறும். இவ்வாறான நிலையில் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்தினால் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை செயற்படுத்த முடியாமல் போகும்.

வரி அதிகரிப்புக்கு எதிராக தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபடும் தரப்பினர் மனசாட்சியுடன் செயற்பட வேண்டும். மாதம் லட்சக்கணக்கில் சம்பளம் பெறுபவர்கள் தான் தற்போது 10 ஆயிரத்திற்கும் குறைவான வரி செலுத்துவதை எதிர்க்கிறார்கள்.

கொவிட் பெருந்தொற்று காலத்தில் மாதகணக்கில் அரச சேவை முடக்கப்பட்டிருந்த போதும் அரச சேவையாளர்களின் சம்பளம் முடக்கப்படவில்லை. பகுதியளவில் குறைக்கப்படவுமில்லை, உரிய நேரத்தில் சம்பளம் வழங்கப்பட்டது.

கொவிட் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைந்த நாடுகள் கூட அரச சேவையாளர்களுக்கான சம்பளத்தை பகுதிளவில் மட்டுப்படுத்தின. ஆனால் அப்போதைய அரசாங்கம் அந்தளவிற்கு செல்லவில்லை.

பொருளாதார ரீதியில் இருந்து மீட்சி பெற வேண்டுமாயின் சகல தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தொழிற்சங்கத்தினர் என்று குறிப்பிட்டுக்கொள்ளும் தரப்பினர் அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் அரசியல் நோக்கங்களுக்காக செயற்படுகிறார்கள்.

நாடாளுமன்றத்தின் முன்வைக்கப்பட்ட சிறப்புரிமை மீறல் பிரச்சினையை எதிர்தரப்பினர் தமது அரசியல் பிரசாரத்துக்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள். நீதிமன்றத்தை சவாலுக்கு உட்படுத்தும் நோக்கம் அரசாங்கத்துக்குக் கிடையாது. – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.