மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க எதிர்க்கட்சிகள் முதலில் ஒன்றுபட வேண்டும் – சரித ஹேரத்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் தற்போது சுய சிந்தனை இல்லாமல் இருக்கிறார்கள். பொருளாதாரம் தொடர்பில் அவர்களுக்கு சொல் புத்தியும் இல்லை சுய புத்தியும் இல்லை, பொருளாதார தொடர்பில் அவர்களுக்கு எவ்வித அறிவும் கிடையாது. பொதுஜன பெரமுனவின் பலவீனத்தை ஜனாதிபதி தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார். ஆகவே பொதுஜன பெரமுனவிற்கு கடவுள் துணை.

உயர்நீதிமன்றத்தின் இடைக்காலத் தடை உத்தரவுக்கு அப்பாற்பட்ட வகையில் ஜனாதிபதி செயற்படுகிறார். உள்ளூராட்சிமன்றத் தேர்தல் வாக்கெடுப்பு ஏப்ரல் 25 ஆம் திகதி இடம்பெறாது. ஜனநாயகத்துக்கு எதிரான அரசாங்கத்தை வீழ்த்த எதிர்க்கட்சிகள் அனைத்தும் முதலில் ஒன்றுபட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்தார்.

நாவல பகுதியில் உள்ள சுதந்திர மக்கள் சபை காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு –

சர்வதேச நாணய நிதியத்தை தவிர்த்து மாற்று திட்டம் ஏதும் இல்லை எனக் குறிப்பிட்டுக் கொண்டு நாட்டை தொடர்ந்தும் கடன் நெருக்கடிக்குள் தள்ளும் நோக்கத்துடன் ஜனாதிபதி செயற்படுகிறார். தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கும், தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லாதமை போல் ஜனாதிபதி கருத்துரைக்கிறார்.

2015-2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஆட்சியில் இருந்த நல்லாட்சி அரசாங்கம் 23.4 பில்லியன் டொலர் முதல் 38.7 பில்லியன் டொலர் வரை வெளிநாட்டு கடன்களைப் பெற்றுக்கொண்டுள்ளது.

குறுகிய நான்கு வருட காலப்பகுதியில் வெளிநாட்டு கடன் பெறல் 65 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. மறுபுறம் 5 பில்லியன் டொலராகக் காணப்பட்ட சர்வதேச பிணைமுறிகள் கடன் 15 பில்லியன் டொலர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனை பொய் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் மறுக்க முடியுமா?

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் தற்போது சுய சிந்தனை இல்லாமல் இருக்கிறார்கள். பொருளாதாரம் தொடர்பில் அவர்களுக்கு சொல் புத்தியும் இல்லை சுய புத்தியும் இல்லை, பொருளாதார தொடர்பில் அவர்களுக்கு எவ்வித அறிவும் கிடையாது.பொதுஜன பெரமுனவின் பலவீனத்தை ஜனாதிபதி தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார். ஆகவே பொதுஜன பெரமுனவிற்கு கடவுள் துணை.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தற்போது இழுபறி நிலையில் உள்ளது. சட்டத்தின் பிரகாரம் தேர்தலை நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு பொறுப்புடன் செயற்பட்டாலும்,ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேர்தலுக்குத் தடையாக செயற்படுகிறார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கிய இடைக்காலத் தடையுத்தரவுக்கு அப்பாற்பட்ட வகையில் ஜனாதிபதி செயற்படுகிறார். ஏப்ரல் 25ஆம் திகதி தேர்தல் இடம்பெறாது. நாட்டு மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கவும், ஜனநாயகத்துக்கு எதிராக செயற்படும் அரசாங்கத்துக்கு எதிராகவும் முதலில் எதிர்க்கட்சிகள் ஒன்று பட வேண்டும். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.