சிறப்புரிமை விவகாரத்தில் இறுதித் தீர்மானம் எடுப்பது சபாநாயகரை சார்ந்தது – அமைச்சரவை பேச்சாளர் பந்துல
உயர்நீதிமன்ற நீதியரசர்கள், தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களை நாடாளுமன்ற சிறப்புரிமை குழுவிற்கு அழைப்பது தொடர்பில் சபாநாயகர் மற்றும் சிறப்புரிமை குழு தீர்மானமே இறுதியானது.
இதில் அரசாங்கத்தின் தலையீடுகள் எவையும் இல்லை. தேவையேற்படின் சம்பந்தப்பட்டவர்கள் சிறப்புரிமை குழுவிற்கு அழைக்கப்படக் கூடும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
தேர்தலுக்காக வரவு – செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை முடக்குவதைத் தவிர்க்குமாறு இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்த உயர் நீதிமன்ற நீதியரசர்களையும் , இதற்கு காரணமான தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களையும் நாடாளுமன்றத்தின் சிறப்புரிமை குழுவிற்கு அழைத்து அவர்களுக்கு அழுத்தம் பிரயோகிப்பதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக எதிர்தரப்பினர் குற்றஞ்சுமத்தியுள்ளனர்.
இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் வினவிய போதே அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில் –
நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பாக முழுமையான அதிகாரம் பெற்றவர் சபாநாயகராவார். எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் தனது நாடாளுமன்ற சிறப்புரிமை மீறப்பட்டுள்ளமை தொடர்பில் அறிவிக்க முடியும்.
குறித்த நாடாளுமன்ற உறுப்பினரால் முன்வைக்கப்படும் காரணிகள் தொடர்பில் சபாநாயகர் உள்ளிட்ட சிறப்புரிமை குழுவே எவ்வாறான நடவடிக்கை எடுப்பது என்பது தொடர்பில் தீர்மானிக்கும்.
அண்மையில் நான் எனது நாடாளுமன்ற சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக அறிவித்த போதிலும் , என்னால் முன்வைக்கப்பட்ட விடயம் நாடாளுமன்ற சிறப்புரிமையை மீறுவதாக அமையவில்லை என்று நாடாளுமன்ற செயலாளர் நாயகத்தால் எனக்கு அறிவிக்கப்பட்டது.
எனவே நான் எனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக எண்ணிய போதிலும் , அதனுடன் தொடர்புடைய குழு அதனை நிராகரித்துள்ளது. அதற்கமையவே மேற்கூறப்பட்ட விடயத்திலும் தீர்மானம் எடுக்கப்படும்.
அந்த வகையில் சிறப்புரிமை தொடர்பில் சபாநாயகர் மற்றும் நாடாளுமன்ற சிறப்புரிமை குழுவின் தீர்மானமே இறுதியானது.
தேவையேற்படின் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அழைப்பு விடுக்கப்படக் கூடும். இதில் அரசாங்கத்தின் தலையீடுகள் எவையும் கிடையா. – என்றார்.
கருத்துக்களேதுமில்லை