சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் 20 ஆம் திகதி கைச்சாத்தாகும் – அமைச்சர் மனுஷ நம்பிக்கை

சர்வதேச நாணய நிதித்துடனான ஒப்பந்தம் 20 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்ட இருக்கிறது. அதன் பின்னர் நாடு தொடர்பான நம்பிக்கை சர்வதேச மட்டத்தில் அதிகரிக்கும். அதன் காரணமாக நாட்டுக்கான வருமான வழிகள் அதிகரிக்கும்.

அத்துடன் நாடு டொலர் இல்லாமல் பாதிக்கப்பட்டபோது நாட்டுக்கு அதிகளவில் டொலர் கொண்டுவர அர்ப்பணிப்புடன் செயற்பட்டது வெளிநாட்டு முகவர் நிறுவனங்களாகும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும் முகவர் நிறுவனங்களை தரப்படுத்தி, அவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வு புதன்கிழமை மாலை பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில் –

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதாரப் பிரச்சினைக்குத் தீர்வுகாண சர்வதேச நாணய நிதியத்தின் உதவியின் கடன் உதவியை நாங்கள் எதிர்பார்த்தோம்.

தற்போது அதுதொடர்பான பேச்சுகள் முடிவடைந்துள்ளன. எதிர்வரும் 20 ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட இருக்கிறது.

என்றாலும் இதனைத் தடுப்பதற்கு சிலர் முயற்சித்து வருகின்றனர்.சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவி கிடைக்கப்பெற்றால், எமது பெரும்பாலான பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முடியுமாகும்.

அதேபோன்று எமது நாட்டின் பொருளாதார முகாமைத்துவம் தொடர்பில் சர்வதேச நாடுகளுக்கு நம்பிக்கை ஏற்படுகிறது. இதன் காரணமாக வருமான வழிகளும் அதிகரிக்கும்.

அத்துடன் நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகி டொலர் இல்லாத நிலையிலேயே எதிர்கால அரசியலை கண்டுகொள்ளாமல் தீர்மானம் ஒன்றை எடுத்து, இந்த அமைச்சைப் பொறுப்பேற்றேன். நான் பொறுப்பேற்கும் போது நாட்டில் 220 டொலர் மில்லியன் அன்னிய செலாவணியே நாட்டில் இருந்தது.

இதனை அதிகரிப்பது பாரியதொரு சவாலாக இருந்தது. மருந்துப் பொருள்களை இறக்குமதி செய்யக்கூட டொலர் இருக்கவில்லை. இதன்போது 500 மில்லியன் டொலர் நாட்டுக்கு கொண்டுவரும் பிரசாரம் ஒன்றை ஆரம்பித்தோம். அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டது வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களாகும்.

வெளிநாடுகளில் தொழில் செய்துவருபவர்கள் நாட்டுக்கு பணம் அனுப்புவதற்கு பின்வாங்கி வந்தனர். இதன்போது அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த பல நடவடிக்கைகளை மேற்கொண்டோம்.

இதன் காரணமாக கடந்த இரண்டு மாதங்களில் 804 மில்லியன் டொலர்களை அன்னிய செலாவணியாக பெற்றுக்கொள்ள முடியுமாகிறது. வெளிநாட்டு முகவர் நிறுவனங்களின் உதவியாலே இதனை செய்ய முடியுமாகியது. அதனால் அதிக அன்னிய செலாவணிகளை நாட்டுக்கு கொண்டுவரும் இந்த துறைக்கு உரிய இடம் வழங்கப்பட வேண்டும்.

அத்துடன் நாட்டில் இருக்கும் பல்வேறு துறைகளுக்கு அரச அனுசரணையில் பல்வேறு வசதிவாய்ப்புக்கள் கிடைக்கின்றன. விவசாயிகளுக்கு உரம் மாநியம் கிடைப்பதுபோல் நாட்டுக்கு அதிக டொலர்களை கொண்டுவரும் துறைக்காக எதிர்காலத்தில் முடியுமான வசதிகளை வழங்க நடவடிக்கை எடுப்போம்.

அதற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சட்ட மூலம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் இந்த துறையில் மோசடி செய்பவர்களை இந்த துறையில் இருந்து முற்றாக நீக்குவதற்கு நடவடிக்கை எடுப்போம். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.