நிதி மோசடி தொடர்பில் என்மீது அவதூறு பரப்பாதீர்கள் – கல்முனை மாநகர முதல்வர்
கல்முனை மாநகரசபை நிதி மோசடி தொடர்பில் என்மீது அவதூறு பரப்பாதீர்கள் என மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்துள்ளார்.
கல்முனை மாநகர சபையின் 60ஆவது மாதாந்த பொதுச் சபை அமர்வு மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் சபா மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற வேளை மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கல்முனை மாநகர சபையில் நிதி மோசடி இடம்பெற்றுள்ளது.இதன்படி இவ்விடயத்தில் நீதியான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். எனினும் நிதி மோசடி தொடர்பில் என்மீது அவதூறு பரப்பாதீர்கள் என்பதை சகல தரப்பினரிடமும் கேட்டுக்கொள்கின்றேன்.
அத்துடன் இவ்விடயம் பற்றி கிழக்கு மாகாண பிரதம செயலாளர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளர் ஆகியோருக்கும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் நிமித்தம் நிர்வாக மட்டத்தில் சுயாதீன விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
குறித்த ஊழியர்களின் சேவைக்காலத்தில் வரியிருப்பாளர்கள் மேற்கொண்ட கொடுக்கல் வாங்கல் செயற்பாடுகளின்போது மேலும் மோசடி முறைகேடுகள் எவையும் இடம்பெற்றுள்ளனவா என்பது தொடர்பிலும் இவற்றுடன் வேறு எவராவது சம்மந்தப்பட்டிருக்கின்றனரா என்பது குறித்தும் தீவிரமாக ஆராயப்பட்டு வருகின்றன.
குறித்த விடயம் நீதிமன்றம் மற்றும் பொலிஸ் புலனாய்வு விசாரணைகளின் கீழ் இருப்பதனால் மேலதிக தகவல்களை வெளிப்படுத்த முடியாது இவ்விடயத்தில் எவர் மீதும் கருணை காட்டப்பட மாட்டாது. நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு நிதி மோசடியுடன் எவர் சம்மந்தப்பட்டிருந்தாலும் உரிய தண்டனைகளை பெற்றுக்கொடுப்பதில் நான் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
மேலும், மாலை இடம்பெற்ற இச்சபை அமர்வின் போது முதலில் சமய ஆராதனை இடம்பெற்ற பின்னர் பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர் உட்பட கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ஏ.எம் ரோஸன் அக்தர், ஏ.ஆர் அமீர்(ஜே.பி),எம்.எஸ் நிசார்(ஜேபி) ,சந்திரசேகரம் ராஜன், ஏ. ஆர். எம். அசீம் ,எஸ்.குபேரன் ,அமர்வில் பங்கேற்று உரையாற்றினர்.
தொடர்ந்து கடந்த கூட்டறிக்கையை உறுதிப்படுத்தல், முதல்வரின் உரை, முதல்வரின் ஏனைய அறிவித்தல்கள் என்பன நடைபெற்றன.அத்துடன் உறுப்பினர்களினால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கப்பட்டதுடன் பின்னர் முதல்வரின் ஏனைய அறிவுறுத்தலுடன் கூட்டம் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை