ஜனாதிபதி ரணிலினால் மாத்திரமே பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண முடியும் – மஹிந்தானந்த

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் மாத்திரமே பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியும். தற்போதைய நிலையில் அமைச்சரவையை மறுசீரமைப்பது முறையற்றது, அரசியல்வாதிகளும் விட்டுக்கொடுப்புடன் செயற்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு –

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை என்னை விடக் கடுமையாக விமர்சித்தவர்கள் கிடையாது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியமையைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தின் ஊடாக இடைக்கால ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கவை தெரிவுசெய்யும் போது நான் பாரிய நெருக்கடிகளுக்கு உள்ளானேன்.

அரசியல் காரணிகளுக்கு முன்னுரிமை வழங்காமல், நாடு என்ற ரீதியில் தீர்மானம் எடுக்க வேண்டும் எனக் கருதி அவருக்கு ஆதரவாக வாக்களித்தேன்.

கடந்த ஆண்டு சமூகக் கட்டமைப்பின் நிலைமைக்கும், தற்போதைய நிலைமைக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன.

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் மாத்திரமே தீர்வு காண முடியும். கடந்த ஏழு மாத காலத்துக்குள் பொருளாதார ரீதியில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.

பொருளாதார மீட்சிக்காக அரசாங்கம் எடுத்த தீர்மானங்களை பலவீனப்படுத்துவதற்காகவே தொழிற்சங்கத்தினர் போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள்.

தற்போதைய நிலையில் அமைச்சரவையை மறுசீரமைப்பது அவசியமற்றது. பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களில் உள்ளவர்களைக் காட்டிலும் அமைச்சு பதவி வகிக்க எனக்குத் தகுதி உள்ளது. பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் அரசியல்வாதிகளும் விட்டுக்கொடுப்புடன் செயற்பட வேண்டும். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.