தீர்வின்றேல் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் – நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர் ஒன்றியம்

சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாட்டின் பின்னராவது அரசாங்கம் எமது கோரிக்கைகளுக்கான தீர்வை வழங்க வேண்டும்.

எதிர்வரும் 22 ஆம் திகதி தீர்வு வழங்கப்படாவிட்டால், அதன் பின்னர் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை என நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர் ஒன்றியத்தின் தலைவர் வைத்தியர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் –

இந்த அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளுக்கு மக்களின் முழுமையான ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவதாகக் காண்பிக்கப்படுகிறது.

ஜனாதிபதியும், ஜனாதிபதி ஊடகப்பிரிவும் பொய்யான தகவல்களை வெளியிட்டு மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கின்றனர்.

மக்களுக்கு உண்மையான தகவல்களை வழங்கவேண்டிய தளமான ஜனாதிபதி ஊடகப்பிரிவு போலிச் செய்திகளை வெளியிடுவதைத் தவிர்த்து, பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

கடந்த சில தினங்களாக இடியமின் இந்நாட்டின் ஜனாதிபதியாகியுள்ளதைப் போன்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு செயற்பட்டுக்கொண்டிருக்கிறது.

எவ்வாறிருப்பினும், அரசாங்கத்துக்கு மேலும் 7 நாள்கள் கால அவகாசத்தை வழங்குகின்றோம்.

எதிர்வரும் 20 ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்துடன் பணிப்பாளர் மட்ட இணக்கப்பாட்டை எட்ட முடியும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய அதன் பின்னராவது, அதாவது எதிர்வரும் 22 ஆம் திகதி எமது கோரிக்கைகளுக்கான தீர்வை வழங்குமாறு வலியுறுத்துகின்றோம்.

அவ்வாறில்லையெனில், 23 ஆம் திகதி முதல் மக்களையும் இணைத்துக்கொண்டு தொடர்ச்சியான வேலை நிறுத்த போராட்டத்திலும், ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபடுவோம் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.