ஏப்ரல் 25 இல் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நிச்சயமற்றது – சாந்த பண்டார
30 கோடி ரூபா முற்பணமாக கிடைத்தால் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்கெடுப்புக்கான வாக்குச்சீட்டுக்களை அச்சிடலாம்.
நிதி ஒதுக்கீடு முன்னிலை பட்டியலில் தேர்தல் நடவடிக்கைகள் உள்வாங்கப்படவில்லை, ஆகவே எதிர்வரும் ஏப்ரல் 25 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இடம்பெறுவது நிச்சயமற்றது என ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார்.
வெகுஜன ஊடகத்துறை அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு –
அரச அச்சகத் திணைக்களம் வெகுஜன ஊடகத்துறை அமைச்சின் விடயதானத்திற்குள் உள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டு அச்சிடல் பணிகளுக்காக மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளுக்கு மாத்திரம் 15 கோடி ரூபா செலவாகியுள்ளது, ஆனால் திறைசேரி 4 கோடி ரூபாவை இதுவரை வழங்கியுள்ளது.
நிதி மற்றும் போதிய பாதுகாப்பு வழங்கினால் வாக்குச்சீட்டு அச்சிடல் பணிகளை தொடர முடியும் என அரச அச்சகத் திணைக்கள தலைவர் திறைசேரிக்கும், பொலிஸ்மா அதிபருக்கும் அறிவித்துள்ளார்.
போதிய பாதுகாப்பு வழங்கத் தயார் என பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டுள்ளார், ஆனால் நிதி விடுப்பு தொடர்பில் திறைசேரி சாதகமான பதிலை அறிவிக்கவில்லை.
நிதி இல்லாமல் வாக்குச்சீட்டு அச்சிடல் பணிகளைத் தொடர முடியாது என அரச அச்சகத் திணைக்களம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. 30 கோடி ரூபாவை முற்பணமாக வழங்கினால் வாக்குச்சீட்டுக்களை அச்சிட முடியும்.
நிதி ஒதுக்கிடல் முன்னிலை பட்டியலில் தேர்தல் நடவடிக்கைகள் உள்வாங்கப்படவில்லை. ஆகவே எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி தேர்தல் இடம்பெறுவது சாத்தியமற்றது. – என்றார்.
கருத்துக்களேதுமில்லை