சுதந்திர ஊடக செயற்பாட்டை சவாலுக்குட்படுத்த வேண்டாம் – இம்தியாஸ் பாக்கிர் மாக்கார்
நாடாளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்திக்கொண்டு ஊடக சுதந்திரம் மற்றும் சட்டத்தின் ஆதிக்கத்தை மலினப்படுத்துவதன் மூலம் எமது நாடு சர்வதேச ரீதியில் புறக்கணிக்கப்படும் அவதானம் இருக்கிறது.
அந்த நிலைக்கு இடமளிக்கக்கூடாது. அத்துடன் சுதந்திர ஊடக செயற்பாடுகளை அடக்குவதற்கு எடுக்கும் நடவடிக்கை, அடிமைத்தனமான ஊடக முறைக்கு செல்வதற்கான முயற்சியாகும் என எதிர்க்கட்சி உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களதும் நாடாளுமன்றத்தினதும் சிறப்புரிமைகள் மீறப்படுதல், பெற்றோலிய வளங்கள் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மற்றும் ஒதுக்கீட்டு சட்டத்தின் கீழான தீர்மானங்கள் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில் –
நாடாளுமன்ற சிறப்புரிமை ஊடாக சுயாதீன நீதிமன்றம் சுயாதீன ஊடக செயற்பாடுகளை அடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஜனாதிபதியால்தான் இது செயற்படுத்தப்படுகிறதா என்ற சந்தேகம் எழுகிறது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்பது விசேட உறுப்பினர்கள் அல்லர். நாட்டின் சட்டத்துக்கு அமையவே அவர்கள் செயற்பட வேண்டும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
சிங்கள வானொலி நிகழ்ச்சி ஒன்றில் இடம்பெற்ற அரசியல் கலந்துரையாடல் நாடாளுமன்ற சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, தற்போது அந்த ஊடக நிறுவனத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக சட்டமா அதிபருக்கும் அறிக்கை சமர்க்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த வானொலி நிகழ்ச்சியால் நாடாளுமன்ற சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக முறையிட்டவர் யார் என இதுவரை யாருக்கும் தெரியாது. அப்படியானால் இந்த சபையை யார் வழிநடத்தி வருகிறார்? இதன் பின்னணியில் இருக்கும் மறைமுக சக்தி யார்?.
அதனால் நாடாளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்திக்கொண்டு நாடாளுமன்றத்தின் கௌரவத்தை மலினப்படுத்த இடமமளிக்கக்கூடாது. முழு நாடாளுமன்றமும் இதுதொடர்பாக ஒன்றுபட்டு செயற்பட வேண்டும்.
இந்த ஊடக அடக்குமுறை தொடர்பாகப் பத்திரிகைகளில் சிறிய செய்தி ஒன்றுகூட பிரசுரிப்பதில்லை. அந்தளவுக்கு இவர்கள் பயந்துள்ளனரா? அல்லது வியாபார நோக்கத்துக்காக ஊடக உரிமையாளர்கள் செயற்படுகிறார்களா? எனப் பார்க்கவேண்டும்.
இது எமது நாட்டின் சுயாதீன ஊடக முறையை இல்லாதலாக்கி அடிமைத்தனமான ஊடக முறைக்கு செல்வதற்கான முயற்சியாகும். சுயாதீன நீதிமன்றம் சட்டத்தின் ஆதிக்கத்துக்கு, சுயாதீன ஊடக செயற்பாடுகளுக்கு விடுக்கும் சவால் காரணமாக ஜனநாயகத்தை மதிக்கும் சர்வதேச நாடுகளால் நாங்கள் புறக்கணிக்கப்படுகிறோம்.
அதனால் நாட்டின் ஜனநாயக செயற்பாடுகளை இல்லாமல் செய்யும் நாடாளுமன்றத்தை நிறைவேற்று அதிகாரியால் அடிமையாக்கும் நடவடிக்கையை அரசாங்கம் வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறான அரசியல் விளையாட்டை அரசாங்கம் நிறுத்திக்கொள்ள வேண்டும். – என்றார்.
கருத்துக்களேதுமில்லை