ஆட்சியதிகாரங்களைக் கைப்பற்ற முயன்ற தரப்பின் நோக்கங்கள் தவிடுபொடியாகின! சாந்த பண்டார பெருமிதம்

வங்குரோத்து அடைந்த நாடு தற்போது கட்டியெழுப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடிகளை முன்னிறுத்தி, அரசாங்கத்தை பலவீனப்படுத்தி ஆட்சியதிகாரங்களை கைப்பற்றுவதற்கு முயற்சித்த எதிர்க்கட்சிகளின் நோக்கங்கள் இல்லாமல் செய்யப்பட்டுள்ளன. எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டுக்களும்; உண்மையில்லை என்பது தற்போது உறுதியாகியுள்ளது.

இனியாவது நாட்டைப் பலப்படுத்துவது பற்றி சிந்தித்து நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப தனிநபர் என்ற ரீதியில் கட்சி, பேதங்களைக் கடந்து ஒன்றிணைய வேண்டும் என ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –

இலங்கை வங்குரோத்து அடைந்துள்ளது என சர்வதேச சமூகம் ஏற்றுக் கொண்டது. பொருளாதார நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டிருந்த நாட்டை அன்று எவரும் பொறுப்பேற்க முன்வரவில்லை.

சிலர் பின்வாங்கினார்கள். இருப்பினும் எந்தவொரு நிபந்தினைகளுமின்றி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த சவாலை ஏற்றுக்கொண்டார்.

அவர் ஏற்றுக்கொண்ட பொறுப்பை சரிவர நிறைவேற்றியுள்ளார். வங்குரோத்து அடைந்த நாட்டைக் கட்டியெழுப்ப ஜனாதிபதியால் முடிந்துள்ளது. குழப்பங்களுக்கு மத்தியில் அன்று நாடாளுமன்றத்தில் நாம் எடுத்த தீர்மானம் சரியானது என்பதை நாட்டு மக்கள் தற்போது உணர்ந்துள்ளனர்.

அரசாங்கம் என்ற வகையில் ஜனாதிபதியுடன் இணைந்து நாட்டின் நன்மை கருதி முக்கியமான தீர்மானங்களை முன்னெடுத்தோம். அதில் ஒன்று தான் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து நிதியுதவி பெற்றுக்கொள்வது. நாம் அதற்காக முன்னெடுத்த நடவடிக்கைகள் நிறைவேற்றப்பட்டு நாணய நிதியத்திடமிருந்து நிதியுதவியும் தற்போது கிடைக்கப் பெற்று இருக்கிறது.

எதிர்க்கட்சிகள் ஸ்திரத்தன்மை நிலையில் நாடு இல்லை என்பதால் நாணய நிதியத்தின் கடன் கிடைக்காது என்றார்கள். ஆனால் அந்த சவால்களை வெற்றி கொண்டுள்ளோம். நெருக்கடிகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று மூச்சு விடுவதற்கு முடிந்துள்ளது. கிடைக்கப்பெற்ற நிதி கடன் என்றாலும் எமக்கு முன்னோக்கி செல்வதற்கான மாற்று பாதையாக இதைக் கருதுகிறோம்.

முன்னதாக நாணய நிதியத்திடமிருந்து 16 தடவைகள் கடன்களை பெற்றுள்ளோம். ஆனால் நாடு அபிவிருத்தி அடையவில்லை என்கிறார்கள். உண்மை தான். இருப்பினும் அவற்றை கொண்டு படிப்பினைகளைப் பெற்றுள்ளோம்.

அன்று கடனுக்கு முன்னதாக முன்வைக்கப்பட்ட திருத்தங்கள் முன்னெடுக்கப்படவில்லை. இருப்பினும் இம்முறை ஆரம்பத்திலேயே திருத்தங்களை மேற்கொண்டுள்ளோம். உதாரணமாக வரி திருத்தங்கள், மின் கட்டண உயர்வு என்பவற்றைக் குறிப்பிடலாம். இந்தத் தீர்மானங்கள் நெருக்கடிகளை ஏற்படுத்தினாலும் எமக்கு இன்று சாதகமான பதிலைத் தந்துள்ளன.

இதேவேளை கடந்த காலங்களில் விட்ட தவறுகளைத் திருத்துவோம். நிதி ஒழுங்குகள் சட்டமாக்கப்படும். ஊழலைத் தடுக்க புதிய சட்ட திட்டங்களைக் கொண்டு வருவோம். முன்னர் இல்லாதது போன்று புதியதொரு நிதி கலாசாரம் உருவாகும்.

எதிர்காலத்தில் நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என்ற நம்பிக்கை எமக்குள்ளது. பொருளாதார நெருக்கடிகளைக் காரணங்களை காட்டி தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தி ஆட்சியதிகாரங்களைப் பெற்றுக் கொள்ள முயன்ற எதிர்க்கட்சிகளின் கனவுகள் இல்லாது செய்யப்பட்டுள்ளன.

இனியாவது நாம் ஒன்றிணைந்து நாட்டைக் கட்டியெழுப்பவும், பொருளாதாரத்தை உயர்த்தவும் ஜனாதிபதிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.