நாணய நிதிய வாய்ப்புகளைப் பயன்படுத்த ஒன்றிணைந்து செயற்பட முன்வாருங்கள்! பிரதமர் தினேஸ் எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு

சர்வதேச நாணய நிதியத்தின் நிதி ஒத்துழைப்புக்கான உறுதிப்பாட்டுடன் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு எமக்கு புதிய கதவு திறக்கப்பட்டுள்ளது.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வதற்கு அனைவரும் ஒத்துழைப்புடன் செயற்படுவது அவசியம் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கை தொடர்பாக ஜனாதிபதியின் நாடாளுமன்ற உரை மீதான சபை ஒத்திவைப்பு வேளை இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில் –

எமது நாட்டுக்கு அந்நிய செலாவணியைக் கொண்டுவருபவர்களும் ஏற்றுமதி துறையில் ஈடுபட்டுள்ளவர்களும் தற்போதைய நிலையில் அதிகமாக அதனைக் கொண்டு வருவதற்கு செயற்படுங்கள் என்றே கூறுகிறோம்.

கடந்த ஆறு மாதங்களில் எமக்கு அந்நிய செலாவணியாக 35 கோடியே 90 லட்சம் டொலர்கள் கிடைத்துள்ளன. அதனை மேலும் அதிகரிக்கச் செய்யுமாறு நாம் அவர்களைக் கேட்டுக் கொள்கின்றோம்.

சர்வதேச நாணய நிதியத்துடனான அனைத்து விடயங்களும் ஜனாதிபதியால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இதனை நாம் வரவேற்கின்றோம்.

நெருக்கடியான, கடினமான நிலையில் நாடு தள்ளப்பட்டிருந்த காலகட்டத்தில் அதிலிருந்து மீள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக எமக்குக் கதவு திறக்கப்பட்டுள்ளது.

190 நாடுகள் சர்வதேச நாணய நிதியத்தின் உறுப்புரிமையைப் பெற்றுள்ளன. அந்த நாடுகள் பல்வேறு கஷ்ட நேரங்களிலும் அதன் உதவிகளைப் பெற்றுக்கொள்ள முடியும். இதன்படி எமது தெற்காசிய நாடுகளிலும் பல நாடுகள் அவ்வாறான உதவிகளைப் பெற்றுள்ளன.

கடந்த 7, 8 மாதங்களுக்கு முன்னர் நாடு மிக நெருக்கடியான நிலையை சந்தித்தது. எனினும் அவ்வாறான கடினமான காலத்திலும் நாம் எந்தவொரு அரசாங்க ஊழியரையும் பணியில் இருந்து நிறுத்தவில்லை.

அவர்களின் தொழில்களைப் பாதுகாக்கத் தேவையான வேலைத்திட்டங்களை முன்னெடுத்தோம். என்றாலும் சிலர் பொருளாதாரக் கஷ்ட நிலையை போக்கிக்கொள்ள வேறு தொழில்களுக்காகத் தங்களின் தொழிலை விட்டுச்சென்றனர்.

அந்நிய செலாவணி தற்போது அதிகரித்து வருகின்றது. சுற்றுலாத்துறையினரின் வருகையும் அதிகரித்து வருகின்றது. இதன்மூலம் எமது நிதி இருப்பை அதிகரித்துக்கொள்ளவும், அதனுடன் தொடர்புடைய மக்களுக்கான வருமான அதிகரிப்பும் உருவாகும்.

அதேவேளை, சம்பள அதிகரிப்புக்களை மேற்கொள்ள முடியுமான சந்தர்ப்பத்தில் அதனை மேற்கொள்ள முடியும் என ஜனாதிபதி தமதுரையில் குறிப்பிட்டிருந்தார்.

நெருக்கடியான நிலையில் இருந்து மீண்டு வருகின்றோம். தற்போது திறக்கப்பட்டுள்ள புதிய கதவை வெற்றிகரமானதாக முன்னெடுப்பதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இந்த சந்தர்ப்பத்தை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை ஆரம்பமாகக் கொண்டு உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, பெரிஸ் கிளப் மற்றும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளும் எமக்கு உதவுவதற்கு முன் வந்துள்ளன.

இந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வதற்கு அனைவரும் ஒத்துழைப்புடன் செயற்படுவது அவசியமாகும். நாடாளுமன்றத்தில் அனைவரதும் ஒத்துழைப்பு அவசியம் என ஜனாதிபதி விடுத்த வேண்டுகோளை அனைவரும் ஏற்றுக்கொண்டு செயற்பட வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்திக் கூறுகின்றேன்.

சில தரப்பினரால் முன்வைக்கப்பட்ட விமர்சனங்கள் முற்றிலும் தவறானவை என்பதுடன் அது பொய்யாகியுமுள்ளது.

எனவே நெருக்கடியான நிலையிலிருந்து மீள்வதற்கான கதவு திறக்கப்பட்டுள்ளது. இது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமானதல்ல, நாட்டு மக்கள் அனைவருக்குமான வாய்ப்பாகும். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.