நாட்டுக்காக ஒத்துழைப்புக்களை எதிர்க்கட்சிகள் வழங்கவேண்டும்! ஜீவன் தொண்டமான் கோரிக்கை
நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்ட பொய்யான வாக்குறுதிகள் பொருளாதார நெருக்கடிக்கு பிரதான காரணியாக உள்ளன. பாரிய போராட்டத்துக்குப் பின்னர் நாடு தற்போது வழமைக்கு திரும்பியுள்ளது.
ஆகவே, எதிர்க்கட்சிகள் பாரம்பரியமான அரசியல் நிலைப்பாட்டை விடுத்து நாட்டுக்காக ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நீர்பாசனம் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சர்வதேச நாணய நிதிய ஒத்துழைப்பு தொடர்பில் ஜனாதிபதியின் விசேட உரை மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு –
பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு அரசாங்கம் சிறந்த திட்டங்களைத் தற்போது செயற்படுத்தியுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தூரநோக்கு சிந்தனையால் சமூகக் கட்டமைப்பு தற்போது எழுச்சி பெற்றுள்ளது.
மக்களாணை இல்லாத அரசாங்கத்துக்கு சர்வதேச நாணய நிதியம் கிடைக்காது என எதிர்தரப்பினர் குறிப்பிட்டார்கள். ஆனால் சர்வதேச நாணய நிதிய ஒத்துழைப்பு தற்போது கிடைக்கப்பெற்றுள்ளது.
முன்னொருபோதும் இல்லாத பாரிய பொருளாதார நெருக்கடியை நாடு கடந்த ஆண்டு எதிர்கொண்டது. எரிபொருள்,எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய சேவை கட்டமைப்பு விநியோகத்தில் பாரிய நெருக்கடிகள் காணப்பட்டன.
நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்குவதாகக் காலம் காலமாக வழங்கிய பொய்யான வாக்குறுதிகள் நாடு வங்குரோத்து நிலைக்கு பிரதான காரணியாகக் காணப்படுகின்றன.
2019 ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த அரசாங்கம் வரிச்சலுகை வழங்கியதால் தேசிய வருமானம் வெகுவாகக் குறைவடைந்தது.
முறையற்ற கடன், ஊழல் மோசடி பொருளாதாரப் பாதிப்பை தீவிரப்படுத்தி பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தியது. பொருளாதாரப் பாதிப்பு, அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தி தற்போது ஒரு ஸ்தீரமான அரசாங்கத்தையும் தோற்றவித்துள்ளது.
நிலையான பொருளாதாரக் கொள்கையைப் பின்பற்றுவதை ஆட்சியில் இருந்த சகல அரசாங்கங்களும் உறுதிப்படுத்தவில்லை.
காலத்துக்குக் காலம் பொருளாதாரக் கொள்கைகள் மாற்றியமைக்கப்படுவதால் ஒரு சிறந்த இலக்கை நோக்கிச் செல்ல முடியாத நிலை காணப்படுகிறது. ஆகவே, நிலையான பொருளாதார மேம்பாட்டுக்கு நிலையான பொருளாதாரக் கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும்.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் சமுர்த்திக் கொடுப்பனவுகள் வழங்கப்படுவதில்லை.
கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்வதற்கு தகுதிகள் இருந்தும் சமுர்த்தி அதிகாரிகளால் மலையக மக்கள் புறக்கணிக்கப்படுவார்கள். இந்த விடயம் தொடர்பில் எதிர்வரும் நாள்களில் உரிய நடவடிக்கை முன்னெடுப்போம்.
காலம் காலமாக செய்த தவறுகளைத் திருத்திக் கொண்டு முன்னோக்கிச் செல்ல வேண்டிய கட்டாயம் காணப்படுகிறது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கொள்கைத்திட்டங்கள் சிறந்தனவாகக் காணப்படுகிறது. ஆகவே எதிர்க்கட்சிகள் பாரம்பரியமான நிலைப்பாட்டில் இருந்து விலகி நாட்டுக்காக ஒத்துழைப்பு வழங்க வேண்டும். – என்றார்.
கருத்துக்களேதுமில்லை