விக்கிரகங்கள் அழிப்பு – மனித உரிமை ஆணைக்குழுவில் நிர்வாகத்தினர் முறைப்பாடு!

வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறிமலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விக்கிரகங்கள் உடைத்தழிக்கப்பட்டமைக்கு எதிராக ஆலய நிர்வாகத்தினரால் வவுனியா பிராந்திய மனித உரிமை ஆணைக்குழுவில் நேற்று (திங்கட்கிழமை) முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

முறைப்பாட்டை வழங்கிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் செயலாளர் து. தமிழ்செல்வன் கருத்து தெரிவிக்கையில் –

எமது ஆலயத்தின் விக்கிரகங்கள் அழிக்கப்பட்டமை மூலம் பௌத்த ஆக்கிரமிப்பின் வெளிப்பாட்டை அனைவரும் உணர்ந்துகொள்ள முடியும். இந்த துன்பியல் சம்பவம் எமக்கு மிகுந்த வேதனையை அளிப்பதுடன் இவ்வாறான செயலை செய்தவர்களுக்கு எமது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

ஆலயத்துக்குள் செல்வதற்கு தொல்லியல் திணைக்களத்தால் எமக்கு தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில் அந்தத் திணைக்களத்தின் வாகனங்களே அங்கு தொடர்ச்சியாக சென்றுவந்தன. எனவே இந்தச்சம்பவத்தின் பின்னணி தொடர்பாக தொல்லியல் திணைக்களத்தின் மீதே நாம் சந்தேகம் கொள்கின்றோம். மனித உரிமை ஆணைக்குழுவிலும் அவர்களுக்கு எதிராகவே எமது முறைப்பாட்டை பதிவுசெய்திருக்கின்றோம். – என்றார்.

இதேவேளை விக்கிரகங்கள் அழிக்கப்பட்ட விடயம் தொடர்பாக நேற்று காலை நெடுங்கேணி பொலிஸ்நிலையத்திலும் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.