இலங்கையில் எரிபொருள் விநியோகத்தை முன்னெடுப்பதற்கு 3 வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி

இலங்கையில் எரிபொருள் விநியோகத்தை முன்னெடுப்பதற்கு மூன்று வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதிப்பத்திரத்தை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அதற்கமைய சீனாவின் சினொபெக், ஆஸ்திரேலியாவின் யுனைடட் பெற்றோலியம் , அமெரிக்காவின் ஆர்.எம். பார்க்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு எரிபொருள் விநியோக சந்தையில் தமது செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான அனுமதிப்பத்திரம் வழங்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தனது உத்தியோகபூர்வ ருவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டு இதனைத் தெரிவித்துள்ள அவர் அந்தப்பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளவை வருமாறு –

மேற்கூறப்பட்ட நிறுவனங்களுக்கு இலங்கையில் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான உரிமங்களை வழங்குவதற்கு வலுசக்தி குழு மற்றும் அதனுடன் தொடர்புடைய பிற கொள்முதல் குழுக்களும் இதற்கான தமது ஒப்புதல் மற்றும் பரிந்துரைகளை வழங்கியுள்ளன.

தற்போது இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் 150 எரிபொருள் விற்பனை நிலையங்களுடன் இணைந்து குறித்த 3 நிறுவனங்களும் அவற்றின் செயற்பாடுகளை முன்னெடுக்கும்.

இலங்கையில் பெற்றோலிய பொருள்களை இறக்குமதி செய்வதற்கும், சேமித்து வைப்பதற்கும், விநியோகிப்பதற்கும் மற்றும் விற்பனை செய்வதற்கும் 20 வருடங்கள் செயற்படுவதற்கான உரிமம் அந்த நிறுவனங்களுக்கு வழங்கப்படவுள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு நிறுவனத்தாலும் புதிய இடங்களில் மேலும் 50 எரிபொருள் நிலையங்கள் நிறுவப்படும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.