அரசுக்கு எதிராக அனைத்து தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும் – பிரதான எதிர்க்கட்சி

நாட்டு மக்கள் உலக நாடுகள் மற்றும் பல்வேறு சர்வதேச அமைப்புகள் இலங்கையில் தேர்தலை நடத்த வேண்டும் என்பதையே வலியுறுத்தி வருகின்றன. இருப்பினும், ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கம் தொடர்ச்சியாக பல்வேறு காரணங்களை முன்னிறுத்தி தேர்தலை பிற்போடும் வேலைத்திட்டங்களையே மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் நாட்டின் ஜனநாயகத்தைப் புறந்தள்ளி சர்வாதிகாரமாக செயற்படும் அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும் என எதிர்க்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில் –

நாட்டு மக்கள் தற்போது தேர்தல் ஒன்றையே கோருகின்றனர். தமக்கு விருப்பமானவர்களைத் தெரிவுசெய்து பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டும் எனக் கருதுகின்றனர்.

இருப்பினும், அரசாங்கம் அவர்களுடைய நியாயமான கோரிக்கையை நிராகரித்து ஜனநாயகத்துக்கு விரோதமாக சர்வாதிகாரப் போக்குடன் செயற்படுகிறது.

ஏற்கனவே நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ள இந்தச் சந்தர்ப்பத்தில் தேர்தலை நடத்தாமல் சர்வாதிகாரப் போக்கில் செயற்படுவதால் மீண்டும் நாட்டை அராஜக நிலைக்கு இட்டுச் செல்லும் என்பதை ஜனாதிபதி புரிந்துகொள்ள வேண்டும்.

முன்னதாக உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இரண்டு வருடங்கள் பிற்போடப்பட்டிருந்த நிலையில் தற்போது அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலை நடத்துமாறு தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றன. சர்வதேச நாடுகள் உட்பட பல்வேறு சர்வதேச அமைப்புகளும் தேர்தலை நடத்துமாறு கோரிக்கை விடுத்து வருகின்றன.

குறிப்பாக, சர்வதேச நாணய நிதியமும் தேர்தலுக்கு எவ்வித தடையும் ஏற்படுத்தாது எனத் தெரிவித்துள்ளது.

இவ்வாறு பரந்துபட்ட சமூகமும் தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தும் நிலையில் அரசாங்கம் அதனைப் புறந்தள்ளி அதற்கு எதிராக தேர்தலை நடத்தாமல் இருக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகிறது. இதேவேளை நீதிமன்றத்தால் தேர்தலுக்கான நிதியை முடக்கும் செயற்பாட்டுக்கு இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்தது.

குறிப்பாக வரவு – செலவுத் திட்டத்தில் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை தேசிய தேர்தல் ஆணைக்குழுவுக்கு வழங்குமாறு நிதி அமைச்சின் செயலாளருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும், இன்றளவில் அதற்கான நிதி வழங்கப்படவில்லை. இது தொடர்பில் நாம் நிதி அமைச்சின் செயலாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.

மேலும், நாட்டின் நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக நாம் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்போம். நாட்டின் நீதிமன்றத்தின் சுயாதீனத் தன்மைகளுக்கு பங்கம் ஏற்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஆணைக்குழுவின் சுயாதீன தன்மையைப் பாதுகாக்கவேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

மக்களின் வாக்களிக்கும் உரிமை இல்லாமல் செய்யப்பட்டுள்ளது. இன்று இவ்வாறு ஜனநாயகத்துக்கு எதிராக அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்பாட்டுக்கு எதிராக நாம் ஒன்றிணைய வேண்டும். நாட்டில் மற்றொரு தடவை சர்வாதிகார ஆட்சி உருவாக இடமளிக்கக் கூடாது. – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.