அடித்து நொறுக்கப்பட்ட திருநெல்வேலி சிறுவர் இல்லம்!

யாழ்ப்பாணம் திருநெல்வேலி சைவ வித்தியா விருத்தி சங்கத்தின் சைவ சிறுவர் இல்லத்தின் அலுவலகம் மற்றும் சிறுவர் இல்ல விடுதியின் ஒருசில பகுதிகள் என்பன சிறுவர் இல்லத்தில் தங்கியுள்ள சில சிறுவர்களினால் அடித்து உடைத்து சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த சிறுவர் இல்லத்தின் விடுதி காப்பாளராக நிர்வாகத்தினரால் நியமிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் , சில மாத காலத்திலையே விடுதி முகாமையாளராக பதிவு உயர்வு பெற்று இருந்தார்.

பதிவு உயர்வு பெற்ற பின்னர் , சிறுவர் இல்லத்தில் உள்ள சிறுவர்களை உடல் ரீதியாக கடுமையான தண்டனைகளை வழங்கி வந்துள்ளார். திறப்பினால் ஒரு சிறுவனுக்கு தலையில் அடித்து காயம் ஏற்படுத்தியமை , சிறுவன் ஒருவனுக்கு சூடு வைத்தமை , இவரது கொடுமைகள் தாங்காது விடுதியை விட்டு தப்பியோடிய சிறுவனை தாயார் மீள இல்லத்தில் ஒப்படைக்க வந்த போது , தாயாருடன் அநாகரிக வார்த்தை பிரயோகம் மேற்கொண்டமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இல்ல நிர்வாகத்திற்கு கிடைக்கப்பெற்று உள்ளன.

அதனை அடுத்து நிர்வாகத்தினர் முகாமையாளரான குறித்த இளைஞனை பதவி நீக்கம் செய்து வேலையை விட்டு நீக்கியுள்ளனர்.

வேலையை விட்டு நிர்வாகம் நீக்கிய போதிலும் , இல்லத்தில் இருந்து வெளியேற மறுத்துள்ளார். அதனால் பொலிஸார் ஊடாக நிர்வாகத்தினர் நீதிமன்றை நாடினர். அதனை அடுத்து நேற்றைய தினம் திங்கட்கிழமை குறித்த நபரை இல்லத்தில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு நீதிமன்று கட்டளையிட்டது.

அந்நிலையில் மாலை இல்லத்தில் இருந்து தான் வெளியேறும் போது அங்கிருந்த சில மாணவர்களை தூண்டி வன்முறைகளை தோற்றுவிற்கும் முகமாக அலுவலகத்தையும் இல்ல விடுதிகளின் சில பகுதிகளையும் அடித்து உடைக்க வைத்துள்ளார் என நிர்வாகத்தினர் குற்றம் சுமத்துகின்றனர்.

அதேவேளை குறித்த நபர் சிறுவர்களை உடல் ரீதியாக மோசமாக துன்புறுத்துகின்றார் என பல தடவைகள் சிறுவர் நன்னடத்தை பிரிவு அதிகாரியிடம் முறையிட்ட போதிலும் , குறித்த அதிகாரி அவருடன் நட்பு பாராட்டி அவருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் குற்றம் சாட்டப்படுகிறது.

இந்நிலையில் தாக்குதல் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்தனர்.

வன்முறையில் ஈடுபட்ட சிறுவர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்து அவர்களின் எதிர்கால வாழ்க்கையினை வீணடிக்க விரும்பாத நிலையில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் என அடையாளம் காணப்பட்ட சிறுவர்களை மாத்திரம் வேறு இல்லங்களுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்குமாறு பொலிசாரிடம் கோரியுள்ளோம்.

சிறுவர்களை வேறு இல்லங்களுக்கு மாற்ற பொலிஸாரினால் நடவடிக்கை எடுக்க முடியாது. அது தொடர்பில் தாம் நீதிமன்றுக்கு அறிவிப்பதாகவும் , நீதிமன்றின் ஊடாக சிறுவர்களை வேறு இல்லங்களுக்கு மற்ற நடவடிக்கை எடுக்கிறோம் என பொலிஸார் நிர்வாகத்தினரிடம் உறுதி அளித்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.