சகவாழ்வைச் சீர்குலைக்கும் முடிவுகளை அமுல்படுத்த வேண்டாம் ; கிழக்கு மாகாண ஆளுநருக்கு மாவட்ட சர்வமதப் பேரவை வேண்டுகோள்

சமூக நல்லுறவு, சகவாழ்வு ஆகியவற்றோடு வாழும் சமூகங்களிடையே சமாதானத்தைச் சீர் குலைக்கும் முடிவுகளை எடுத்து அமுல்படுத்த வேண்டாம் என கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்திடம் வேண்டுகோள் விடுக்கும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய சமாதானப் பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவைக்கான இணைப்பாளர் ஆர். மனோகரன் தெரிவித்தார்.

மாவட்ட சர்வமதப் பேரவையின் மாதாந்த ஒன்று கூடல் மட்டக்களப்பு கூட்டுறவு கேட்போர் மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை 28.03.2023 இடம்பெற்ற பொழுது மாவட்டத்தில் இன ஐக்கியத்தைச் சீர்குலைக்கும் அதிகாரபூர்வ விடயங்கள் பற்றிய கரிசனைகள் முன்வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் ஹிந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமூகங்களைச் சேர்ந்த மாவட்ட சர்வமதப் பேரவை உறுப்பினர்களும் அதன் சமாதான செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு மீன் பாடும் தேன் நாடு எனும் பூர்வீகத் தமிழ்ப் பெயரை “மீனகய” என்று மாற்றியிருப்பது, அதேபோன்று மட்டக்களப்பு கொழும்புக்கு இடையிலான “உதய தேவி” புகையிரத சேவைக்கு சிங்களப் பெயரைச் சூட்டியிருப்பது, மட்டக்களப்பு கல்லடிப் பாலத்திற்கு அருகிலுள்ள பூங்காவிற்கு சிங்களப் பெயரைச் சூட்டியிருப்பது, மேலும், இவ்வாரம் தொன்மை வாய்ந்த பெயரைக் கொண்ட ஏறாவூர் புன்னைக்குடா வீதியை சிங்கள சமூகத்தவரின் “எல்விஸ் வல்கம” வீதி எனப் பெயர் மாற்ற நடவடிக்கை எடுத்திருப்பது உள்ளிட்ட இன்னும் பல விடயங்களை சமூக நல ஆர்வலர்கள் முன்வைத்தனர்.

இதன்போது இவ்வாறான பூர்வீகங்களையும் சிறுபான்மை இனங்களின் அடையாளங்களையும் மாற்ற எடுக்கும் அதிகாரபூர்வ நடவடிக்கைகளை அமுல்படுத்த வேண்டாம் என ஆளுநரைக் கோருவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் அநட்த வேண்டுகோள்  கடிதங்கள் ஆளுநர், மாவட்டச் செயலாளர், பிரதேச செயலாளர், உட்பட சமாதான செயற்பாட்டு அமைப்புக்களுக்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் இணைப்பாளர் மனோகரன் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.