ராகுல் காந்திக்கு கிடைத்த தண்டனை ஏற்பாடுகளை உள்ளடக்கிய சட்டம் இலங்கையிலும் வரவேண்டும்! சாகர காரியவசம் கூறுகின்றார்

இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்திக்கு கிடைத்த தண்டனை ஏற்பாடுகளை உள்ளடக்கியதாக ஊழல் ஒழிப்பு சட்டம் உருவாக்கப்பட வேண்டும்.

ராஜபக்ஷர்கள் தலைமையிலான அரசாங்கத்தில் ஊழல் ஒழிப்பு தொடர்பான சட்டம் உருவாக்கப்படுவதை அதிஷ்டமாகக் கருதுகிறோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

பொதுஜன பெரமுன காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு –

பொருளாதார மீட்சிக்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னெடுக்கும் சிறந்த திட்டங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். போராட்டத்தின் ஊடாகப் பொருளாதார நெருக்கடிக்கு ஒருபோதும் தீர்வு காண முடியாது என்பதை நாட்டு மக்கள் தற்போது விளங்கிக் கொண்டுள்ளார்கள்.

பொருளாதார மேம்பாட்டுக்கும், அத்தியாவசிய சேவைத்துறைக்கும் பாதிப்பு ஏற்படும் வகையில் தொழிற்சங்கத்தினர் முன்னெடுக்கும் பணிப்புறக்கணிப்பு போராட்டங்களுக்கு எதிராக அரசாங்கம் செயற்பட வேண்டிய தேவையில்லை. நாட்டு மக்களே அவர்களுக்குத் தக்க பாடம் கற்பிப்பார்கள். இறுதி தீர்மானத்தை எடுக்கும் பொறுப்பை மக்களிடம் ஒப்படைத்து விட வேண்டும்.

ஊழலை ஒழிப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம் ஊழல் ஒழிப்புக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

மாறாக, அந்தக் காலப்பகுதியில் ஊழல்கள் வலுப்பெற்றன. ராஜபக்ஷர்கள் திருடர்கள், அரச நிதியை மோசடி செய்தார்கள் என அரசியல் நோக்கத்துக்காக மாத்திரம் பொய்யான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

ஊழல் ஒழிப்பு சட்டத்தை உருவாக்க அரசாங்கம் ஆரம்பக்கட்ட நடவடிக்கைளை மேற்கொண்டுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் இந்த சட்டம் இயற்றப்படும். ஊழல் ஒழிப்புக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம். ராஜபக்ஷர்கள் தலைமையிலான அரசாங்கத்தில் ஊழல் ஒழிப்பு சட்டத்தை உருவாக்குவதை அதிஷ்டமாகக் கருதுகிறோம்.

சேறு பூசும் வகையிலான அரசியல் பிரசாரங்களுக்கு எதிராக இந்திய நீதிமன்றம் சிறந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை அவமதிக்கும் வகையில் தவறான கருத்தை வெளியிட்டார்.

இதற்கு நீதிமன்றம் கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளது. ஆகவே இந்த தண்டனை ஏற்பாட்டை இயற்றப்படவுள்ள ஊழல் ஒழிப்பு சட்டத்துக்கு உள்வாங்க வேண்டும்.

குறுகிய அரசியல் நோக்கத்துக்காக பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது நாட்டில் இயல்பானதொரு விடயமாகி விட்டது. சிறந்த மாற்றத்துக்காக கடுமையான தீர்மானங்களை முன்னெடுக்க வேண்டும். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.