பாலியல் – இனப்பெருக்க ஆரோக்கியம் தொடர்பில் மாணவர்களுக்கு பாடப் புத்தகம்: ரோகினி குமாரி அறிவுறுத்தல்!

பாடசாலை மாணவர்களுக்கான பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் தொடர்பான பாடப்புத்தகங்களைத் தயாரிப்பதற்காக, கல்வி அமைச்சுடன் இணைந்து விசேட குழுவொன்றை நியமிக்குமாறு சிறுவர்களுக்கான நாடாளுமன்ற குழாத்தின் தலைவி ரோகினி குமாரி விஜேரத்ன அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

கடந்த வாரம் நடைபெற்ற சிறுவர்களுக்கான நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் அவர் அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.

கல்வி அமைச்சு மற்றும் கல்வி அமைச்சின் கீழுள்ள பல்வேறு நிறுவனங்களின் பிரதிநிதிகள், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை, நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் இந்தக் குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இந்தக் குழுவின் பொறுப்புகள் மூன்று மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்றும் அதற்கான காலக்கெடுவை அடுத்த கூட்டத்தின் போது தயாரிக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் குழுவின் தலைவியான நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன கூறியுள்ளார்.

குழுவில் உரையாற்றிய கல்வி அமைச்சின் பிரதிநிதிகள், பதினாறு வயதுக்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் குறித்துக் கற்பிப்பதற்கான பாடப்புத்தகங்கள் ஏற்கனவே தயார் செய்யப்பட்டுள்ளன எனத் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் சிறுவர்களின் மனதுக்கு ஏற்றவாறு பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் குறித்து சிறுவயதிலிருந்தே கற்பிக்க வேண்டிய அவசியம் இருப்பதால், பாடப்புத்தகங்களைத் தயாரிக்கும் பணியை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என்று குழு வலியுறுத்தியுள்ளது.

திட்டத்தின் முதற்கட்டமாகப் பாடப் புத்தகங்கள் அச்சிடப்படாவிட்டாலும், மாணவர்கள் இணையத்தளம் மூலம் அதனைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பு அளிக்கலாம் என்றும் ஆலோசனை கூறப்பட்டுள்ளது.

பாலியல் துஷ்பிரயோகங்களில் இருந்து அவர்களைப் பாதுகாப்பதற்காக பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் தொடர்பாக மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டியதன் அவசியம் குறித்து மதத் தலைவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஊடகங்களுக்குக் கல்வி கற்பதற்கான நிகழ்ச்சிகளையும் குழு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

திருமணத்துக்குப் பின் குடும்ப நல அலுவலர்கள் மூலம் பெண்களுக்கு வழங்கப்படும் விழிப்புணர்வின் போது, எதிர்காலத்தில் பாலியல் துஷ்பிரயோகங்களில் இருந்து தங்கள் குழந்தைகளை எவ்வாறு பாதுகாப்பது என்பது தொடர்பாகவும் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் குழுவில் ஆலோசனைகள் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.