எல்லை நிர்ணய அறிக்கை தயார் ; கையளிக்கத் திகதி எதிர்பார்ப்பு!  ஆணைக்குழு தலைவர் மஹிந்த காத்திருப்பு

புதிய எல்லை நிர்ணய அறிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளது. கையளிப்பதற்கான திகதியை பிரதமரிடம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் என எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

எல்லை நிர்ணயம் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அரைவாசியாகக் குறைக்கும் நோக்கில் நியமிக்கப்பட்ட எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை தொடர்பாகக் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில் –

உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர் தொகையை அரைவாசியாகக் குறைக்கும் நோக்கில் நியமிக்கப்பட்ட எல்லை நிர்ணய குழுவின் அறிக்கை தயார் நிலையில் உள்ளது.

இந்த அறிக்கை விரைவில் பிரதமரும் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சருமான தினேஷ் குணவர்தனவிடம் கையளிக்கப்படவுள்ளது.  அதற்கான திகதியொன்றை ஒதுக்கித் தருமாறு தான் பிரதமரிடம் கேட்டிருக்கிறேன்.

அத்துடன் உள்ளூராட்சி மன்றங்களின் தற்போதைய உறுப்பினர் தொகை சுமார் 8500 இலிருந்து 4714 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு எண்ணிக்கையைக் குறைக்கும் வகையிலே எல்லை நிர்ணயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த உறுப்பினர் தொகையில் தேர்தல்கள் ஆணைக்குழு மாற்றங்களை செய்ய முடியும்.

அத்துடன்  341 உள்ளூராட்சி மன்றங்களில் 340 உள்ளூராட்சி மன்றங்களின் எல்லைகள் மீள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. கல்முனை மாநகர சபை தொடர்பான வழக்கொன்று நீதிமன்றில் விசாரணையின் கீழ் உள்ளதால் அச்சபைக்கான எல்லை நிர்ணயம் கவனத்திற் கொள்ளப்படவில்லை.

ஒன்பது மாகாணங்களைச் சேர்ந்த உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை நிர்­ணய அறிக்கை தனித்தனியாக மாகாண ரீதியில் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் மொத்தம் 27 அறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

எல்லை நிர்ணய குழுவின் அறிக்கை தொடர்பில் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டால் மீளாய்வுக் குழுவொன்றினை நியமித்து அது தொடர்பில் ஆராய்ந்து தீர்மானம் மேற்கொள்வதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு அதிகாரமுண்டு. – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.