பொருளாதாரத்தின் சகல துறைகளையும் டிஜிட்டல் மயப்படுத்துங்கள் – சர்வதேச வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் மரியா

நாட்டின் பொருளாதாரத்தின் சகல துறைகளும் டிஜிட்டல் மயப்படுத்தப்படுவதன் மூலமே அவற்றின் உலகளாவிய தரத்தை உறுதிசெய்யமுடியும் என்று சர்வதேச வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் மரியா பெர்னாண்டா கார்ஸா சுட்டிக்காட்டியுள்ளார்.

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கடந்த புதன்கிழமை (18) இலங்கைக்கு வருகைதந்த சர்வதேச வர்த்தக சம்மேளனத்தின் முதலாவது பெண் தலைவர் மரியா பெர்னாண்டா கார்ஸா, அலரிமாளிகையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்துக் கலந்துரையாடியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இச்சந்திப்பின்போது இலங்கையில் வர்த்தகம் மற்றும் முதலீடு, வங்கி, காப்புறுதி, கல்வி மற்றும் பயிற்சி வழங்கல், நிதி, சுற்றுலா, விவசாயம், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வணிகங்கள், முயற்சியாண்மை அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சர்வதேச வர்த்தக சம்மேளனத்தின் வகிபாகம் குறித்து ஆராயப்பட்டது.

அதேவேளை உணவுப்பாதுகாப்பு மற்றும் ஏற்றுமதி உள்ளடங்கலாக அரசாங்கம் விசேட கவனம்செலுத்திவரும் முன்னுரிமைக்குரிய விடயங்கள் தொடர்பில் சர்வதேச வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் மரியா பெர்னாண்டா கார்ஸாவிடம் பிரதமர் எடுத்துரைத்தார்.

அவரைத்தொடர்ந்து கருத்து வெளியிட்ட மரியா பெர்னாண்டா கார்ஸா, ‘சர்வதேச வர்த்தக சம்மேளனத்தில் 170 நாடுகள் அங்கம்வகிப்பதுடன் 45 மில்லியன் நிறுவனங்கள் வர்த்தக உறுப்புரிமையைக் கொண்டிருக்கின்றன. அதேபோன்று இதில் அங்கம்வகிக்கும் நிறுவனங்கள் உணவுப்பாதுகாப்புசார் சவால்களை உரியவாறு கையாள்வதற்கு அவசியமான உதவிகளை வழங்கும் நோக்கில் கடந்த 2021 ஆம் ஆண்டு விவசாயக் கொள்கை, உணவுப்பாதுகாப்பு மற்றும் விநியோக சங்கிலி தொடர்பான குழு உருவாக்கப்பட்டது’ என்று சுட்டிக்காட்டினார்.

அதேபோன்று உலகளாவிய தரத்தை உறுதிப்படுத்துவதற்கு பொருளாதாரத்தில் சகல துறைகளும் டிஜிட்டல் மயப்படுத்தப்படவேண்டியது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.