சாகல விளையாடிய விளையாட்டு என்ன ? விமல் விளையாட்டு அமைச்சரிடம் கேள்வி

விளையாட்டு சட்டத்தை திருத்தம் செய்வதற்கு அமைச்சர் முன்வைத்த வரைவை ஆராய சாகல ரத்நாயக்க தலைமையில் குழு நியமிக்கப்பட்டதாகக்; குறிப்பிடுகின்றமை மிக மோசமானதாகும்.

சாகல விளையாடிய விளையாட்டு என்ன என்று குறிப்பிட முடியுமா என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ஸ, விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவை நோக்கி கேள்வியெழுப்பினார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அமர்வின் போது கிரிக்கெட் நிறைவேற்று குழு நீக்கம், இடைக்கால குழு நியமனம் தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் குறுக்கிட்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியவை வருமாறு –

அமைச்சரால் அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்ட சட்டமூல வரைவு தொடர்பில் அமைச்சரவை உப குழு நியமிக்கப்படுவது இயல்பானதே. விளையாட்டுத்துறை அமைச்சர் முன்வைத்த வரைவை ஆராய்வதற்கு ஜனாதிபதியின் அலுவலக பிரதானி சாகல ரத்நாயக்க தலைமையில் குழு நியமிக்கப்பட்டதாக அமைச்சர் குறிப்பிடுகின்றமை மிக மோசமானதாகும்.

சாகலவுக்கு கிரிக்கெட் விளையாட்டு பற்றி என்ன தெரியும், அவர் விளையாடிய விளையாட்டு என்ன, மாறுபட்ட திருத்த யோசனைகளை சாகல  ரத்நாயக்க முன்வைத்துள்ளார் என அமைச்சர் குறிப்பிடுகிறார். அவ்வாறாயின் அமைச்சருக்கு அப்பாற்பட்ட வகையில் சாகல ரத்நாயக்க செயற்படுகிறார்.

கிரிக்கெட் நிறைவேற்றுக்குழு நிர்வாகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி தவறுகளை திருத்திக்கொள்ள அமைச்சர் உரிய நடவடிக்கைகள் எடுத்தாலும் நிறைவேற்றுத்துறை அதற்கு எதிராக செயற்படுவதை அவதானிக்க முடிகிறது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் செயற்பாட்டின் பிரதிபலனை அவரை தெரிவு செய்தவர்கள் தற்போது அனுபவிக்கிறார்கள். – என்றார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.