அரசின் வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகள் நாட்டுமக்களை ஏமாற்றும் மற்றுமொரு செயற்பாடு ஹரினி அமரசூரிய சுட்டிக்காட்டு

நாட்டு மக்களை ஏமாற்றும் பிறிதொரு செயற்பாடாகவே 2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் காணப்படுகிறது. நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் எவ்வித பரிந்துரைகளும் அதில் முன்வைக்கப்படவில்லை.

இருக்கும் பல்கலைக்கழகங்களில் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் புதிதாக நான்கு பல்கலைக்கழகங்களை அமைப்பதாக குறிப்பிடுவது நகைப்புக்குரியது என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை ஜனாதிபதியும்,நிதியமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் முன்வைத்தார்.

இதனைத் தொடர்ந்து வரவு – செலவுத் திட்டம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு –

தவறுகளை திருத்திக் கொண்டு முன்னேறிச் செல்ல வேண்டும் என்று குறிப்பிட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வரவு – செலவுத் திட்டத்தை சமர்ப்பித்தார்.

2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட சமர்ப்பின் போது இந்த கருத்தையே குறிப்பிட்டார். ஆனால் எந்த தவறும் திருத்திக் கொள்ளப்படவில்லை.

நாட்டு மக்களை ஏமாற்றும் பிறிதொரு செயற்பாடாகவே இந்த வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு முன்வைக்கப்படவில்லை. வரி அதிகரிப்பு,தேசிய வளங்களை விற்றல் என்பவை அரச கொள்கையாக முன்வைக்கப்பட்டுள்ளன.

வரையறையற்ற கடன்களால் நாடு வங்குரோத்து நிலையடைந்தது என்று ஜனாதிபதி குறிப்பிடுகிறார்.ஆனால் கடன்படு எல்லையை 3400 பில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளார். ஆகவே இந்த வரவு செலவுத் திட்டம் நடைமுறைக்கு ஒருபோதும் சாத்தியமடையாது.

நாட்டில் 17 அரச பல்கலைக்கழகங்கள் உள்ளன. இவற்றில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு முன்வைக்கப்படவில்லை.

மாறாக புதிதாக 4 பல்கலைக்கழகங்களையும்,தனியார் பல்கலைக்கழகங்களையும் உருவாக்குவதாக ஜனாதிபதி குறிப்பிடுகிறார். இது நகைப்புக்குரியது.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என்பதை ஜனாதிபதி தனது முன்மொழிவுகள் ஊடாக குறிப்பிட்டுள்ளமை வரவேற்கத்தக்கது. – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.