நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துமாறு மக்களிடமிருந்து அழுத்தமாம்! நீதியமைச்சர் விஜயதாஸ கோருகிறார்

சட்டமியற்றி நாடாளுமன்றத்தின் கௌரவத்தை பாதுகாக்க முடியாது. 225 உறுப்பினர்கள் நாட்டு மக்களுக்கும், எதிர்கால தலைமுறையினருக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக செயற்பட வேண்டும்.

ஆனால் தற்போது அவ்வாறான தன்மை ஏதும் கிடையாது. ஆகவே நாடாளுமன்றத்தின் கௌரவத்தைப் பாதுகாக்க கடுமையான தீர்மானங்கள் எடுக்க வேண்டும் என நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியவை வருமாறு –

நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகளை கண்காணிப்பதற்கு சட்டமியற்ற வேண்டும் என தற்போது குறிப்பிடப்படுகிறது.

1978 ஆம் ஆண்டு அரசமைப்பில் 91 ஆவது பிரிவில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகள் தொடர்பில் நாடாளுமன்றத்தின் ஊடாக சட்டமியற்றப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை அவ்வாறான சட்டம் இயற்றப்படவில்லை.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் போது இந்த சட்டமியற்றல் வேண்டுமென்றே காலதாமதப்படுத்தப்படுகிறது என்று பலமுறை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த வேண்டும்,கண்காணிக்க வேண்டும் என மக்கள் மத்தியில் இருந்தும் கடும் அழுத்தம் பிரயோகிக்கப்படுகிறது.

இவ்வாறான பின்னணியில் நாடாளுமன்றத்தின் தரம் தொடர்பான சட்ட வரைவு  (நாடாளுமன்ற அதிகார சபை) அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டமூலம் தொடர்பில் சகல அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடி இறுதி தீர்மானம் எடுக்கும் பொறுப்பு பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர்  நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடு, நாடாளுமன்ற கோட்பாடுகளுக்கு முரணாக செயற்படும்  உறுப்பினர்களை நாடாளுமன்ற உறுப்புரிமையில் இருந்து நீக்கும் அதிகாரம் இந்த  அதிகார சபைக்கு வழங்கப்படும்.

சட்டமியற்றி நாடாளுமன்றத்தின் கௌரவத்தைப் பாதுகாக்க முடியாது. 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாட்டு மக்களுக்கும், எதிர்கால தலைமுறையினருக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக செயற்பட வேண்டும்.

ஆனால் தற்போது அவ்வாறான தன்மை ஏதும் கிடையாது. ஆகவே நாடாளுமன்றத்தின் கௌரவத்தைப் பாதுகாக்க கடுமையான தீர்மானங்கள் எடுக்க வேண்டும். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.