காஸாவில் அமைதியை ஏற்படுத்த எமது நாடு உலக நாடுகளுடன் இணைந்து செயற்பட வேண்டும் – ரவூப் ஹக்கீம் கோரிக்கை

இஸ்ரேல் இராணுவத்தினரால் காஸாவில் இடம்பெற்று வரும் இனப்படுகொலையை நிறுத்தி அங்கு அமைதியை ஏற்படுத்த எமது நாடு ஏனைய நாடுகளுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (16) இடம்பெற்ற வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு தமீதான மூன்றாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

காஸாவில் இஸ்ரேல் இராணுவம் பாரியளவில் மனித உரிமையை மீறி செயற்பட்டு வருகிறது. காஸா மக்கள் மீது இனப்படுகொலையே அங்கு இடம்பெறுகிறது.

சர்வதேச நாடுகள் பல இது தொடர்பாக குரல்கொடுத்து வருகின்றபோதும் அங்கு பாரியளவில் தொடர்ந்தும் இனப்படுகொலை இடம்பெற்று வருகிறது.

அதனால் உடனடியாக அங்கு அமைதியை ஏற்படுத்தி அந்த அப்பாவி மக்களை பாதுகாக்க சர்வதேசம் தலையீடு செய்ய வேண்டும்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை அமைப்பு 2005இல் ஆர், 2பீ என்ற கொள்கையை அறிமுகப்படுத்தி இருந்தது. ஒரு அரசாங்கம் தனது மக்களை அநியாயமான முறையில் நடத்தும்போது அதற்கு எதிராக சர்வதேசம் தலையீடு செய்வதற்கே இந்த பிரகடனம் அறிமுகப்படுத்தப்பட்டது.

தெற்கு சூடானில் அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டிருந்தபோது சர்வதேசம் இந்த பிரகடனத்தை பயன்படுத்தி அதில் தலையீடு செய்திருந்தது.

அதேபோன்று ஆர், 2பீ பிரகடனத்தை பயன்படுத்திக்கொண்டு சில மேற்குலக நாடுகள் சில நாடுகளுக்குள் நுழைந்து அங்கு தலையீடுகளை மேற்கொண்டு வருகின்றன.

எனவே பலஸ்தீனத்தில் இடம்பெற்று வரும் இனப்படுகொலையை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். உலக நாடுகள் பல தற்போது பலஸ்தீனுக்காக குரல்கொடுத்து வருகின்றன. அதனால் எமது நாடும் எனைய நாடுகளுடன் கலந்துரையாடி அங்கு அமைதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.