கோட்டாவுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் உயர் நீதிமன்றத் தீர்ப்பு சாட்டை அடியாம்! லக்ஷ்மன் கிரியெல்ல வைகிறார்

உயர் நீதிமன்றம் பொருளாதாரக் கொலை தொடர்பாக வழங்கி இருக்கும் தீர்ப்பு வரலாற்று முக்கியமானதாகும். ஆட்சியாளர்கள் அநீதியான முறையில்  பணம் சம்பாதித்திருந்தால், அது தொடர்பில் தேடிப்பார்க்க தயாராக இருக்கிறது என்ற செய்தியையும் இதன் மூலம் உயர் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. அத்துடன் நீதிமன்றத் தீர்ப்பு கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் பொருத்தம் என எதிர்க்கட்சி பிரதமகொரடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான  நான்காம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில் –

தேர்தல் பிரசாரத்துக்கு உதவி செய்தால் பதவிக்கு வந்ததுடன் வரிகளைக் குறைத்து நிவாரணம் வழங்குவதாக கோட்டாபய ராஜபக்ஷ பெரிய வியாபார நிறுவனங்களுக்கு வாக்குறுதி வழங்கியிருந்தார்.

அதன் பிரகாரமே நாட்டுக்கு கிடைத்துவந்த வரி வருமானத்தைக் குறைப்பதற்கு அவர் தீர்மானித்தார். கோட்டாபய ராஜபக்ஷ தேர்தலுக்கு முன்னர் சங்கிரில்லா ஹோட்டலில் பெரும் வியாபாரிகளை சந்தித்து கலந்துரையாடியபோதே  இந்த வாக்குறுதியை  வழங்கியிருந்தார்.

இதன் போது  நாட்டில் இருக்கும் பெரும் வியாபாரி ஒருவர் 1000 மில்லியன் ரூபா வழங்கினார். இந்த விடயங்களை நாங்கள் இந்த சபையில் ஆரம்பத்திலேயே தெரிவித்திருந்தோம். அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததுடன் வரி குறைப்பு மேற்கொண்டதாலேயே நாட்டுக்கு இந்த நிலை ஏற்படக் காரணமாகும்.

அத்துடன் வரி குறைப்பு செய்து நாட்டுக்கு கிடைத்து வந்த வருமானத்தை இல்லாமல் செய்ததாலே நாடு வங்குரோத்து அடைய காரணமாகும். வரியை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கும்போது அதற்கு ஆளும் கட்சி உறுப்பினர்கள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதனால் இந்த நாடு வங்குரோத்தடைய பொறுப்புக்கூறவேண்டியவர்கள் என நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அரசாங்கத்தில் இருக்கும் ஏனையவர்களுக்கும் பொருத்தமாகும்.

அத்துடன் பொருளாதார கொலைகாரர்கள் தொடர்பாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்க முன்னர் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவை இதனைத் தெரிவித்திருந்தது.

பொருளாதார நெருக்கடிக்கு இலங்கை அரசாங்கம்  பொறுப்புக்கூற வேண்டும் என மனித உரிமை பேரவை கடந்த கூட்டத்தின்போது இதனைத் தெரிவித்திருந்தது.

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததுடன் சர்வதேச நாடுகளில் வங்கிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த திருட்டுப்பணங்களை மீள பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்தபோது, அது தொடர்பில் சாட்சிகளை முன்வைத்து எமது நாட்டின் நீதிமன்றத் தீர்ப்பை பெற்றுக்கொண்டு வருமாறே தெரிவித்திருந்தது.

ஆனால் அந்தக் காலத்தில் அவ்வாறான தீர்ப்பொன்றை பெற்றுக்கொள்வது சாத்தியமில்லை. அதனால் வெளிநாடுகளில் வங்கிகளில் வைக்கப்பட்டிருக்கும் திருட்டுப்பணங்களை நாட்டுக்கு கொண்டுவர நிதிமன்றம் உத்தரவிட்டால் அந்தத் தீர்ப்பை அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொள்கின்றன. ஆனால்  இலங்கையில் அது இடம்பெறவில்லை.

என்றாலும் உயர் நீதிமன்றம் பொருளாதார கொலை தொடர்பாக தற்போது வழங்கி இருக்கும் தீர்ப்பு வரலாற்று முக்கியமானதாகும். ஆட்சியாளர்கள் அநீதியான முறையில்  பணம் சம்பாதித்திருந்தால், அது தொடர்பில் தேடிப்பார்க்கத் தயாராக இருக்கிறது என்ற செய்தியை இதன் மூலம் உயர் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

எனவே வரி குறைப்புக்கு கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளித்தவர்களுக்கு என்ன தண்டனை வழங்க முடியும் என எனக்குத் தெரிவிக்க முடியாது. ஆனால் இவர்கள் அனைவரும் களனி விகாரைக்கு சென்று பாவமன்னிப்புக் கோர வேண்டும்.

அத்துடன் நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள பாரியளவிலான முதலீகள் நாட்டுக்குள் மேற்கொள்ளப்பட வேண்டும். அவ்வாறு இல்லாமல் இனனும் 10 வருடங்களுக்காவது இந்தப் பிரச்சினை தொடரும். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.