வெளிநாட்டில் பணிபுரியும் வீட்டுப்பணிப்பெண்களின் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் மனுஷ நாணயக்கார உத்தரவாதம்

வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் ஈடுபட்டுள்ள வீட்டுப் பணிப்பெண்கள் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர் எனக் கூக்குரலிடும் அரச சார்பற்ற நிறுவனங்கள் பல இருந்த போதிலும், குறைந்த சம்பளத்துக்கு அடிமைகள் போன்று பணிபுரியும் உள்ளூர் வீட்டு வேலையாள்கள் தொடர்பில் குரல் எழுப்புவதில்லை. இதற்கான தீர்வை வழங்கி அவர்களைக் கௌரவிக்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்பபடுத்தப்படுவதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

முறைசாரா ஊழியர்களுக்கு தொழில் கௌரவத்தை பெற்றுக்கொடுப்பதற்காக ‘கரு சரு’ வேலைத்திட்டத்தின் கீழ் வீட்டுப்பணிப்பெண்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

முறைசாரா சேவையில் ஈடுபட்டுள்ளோரின் தொழில் கௌரவத்தை மேம்படுத்துவதற்கான ‘கரு சரு’ என்ற வேலைத்திட்டத்திற்கு  பொது மக்களின் கருத்துக்களைக் கேட்டறிவிதற்கான தொடர் செயல் அமர்வின் இரண்டாவது அமர்வு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது.

வீட்டுப் பணிப்பெண் தொழிலில் ஈடுபட்டுள்ளோருக்கு தொழில்  கௌரவத்தை சட்ட ரீதியில் பெற்றுக்கொடுப்பதுடன் அவர்களுக்கு ஏனைய தொழிலாளர்களுக்கு உள்ள ஊழியர் சேமலாப நிதி உள்ளிட்ட நன்மைகளை வழங்கி தொழில் பாதுகாப்பை  உரித்தாக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதே கரு சரு வேலைத்திட்டத்தின் நோக்கமாகும் என்று அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

ஒருவருடத்திற்கு மேற்பட்ட காலமாக இதுகுறித்து நாம் பேசினோம். தேவையான அடிப்படை நடவடிக்கைகளை முன்னெடுத்தோம். நாம் தற்போது முறையான வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தற்போது கலந்துரையாடுகின்றோம். இதற்கான அடிப்படை அனுமதியை பெற்றுக்கொண்டுள்ளோம்.

இலங்கையில் ஈ.பி.எவ்.,ஈ.ரி.எவ். ஆகியவற்றுக்கு பங்களிப்பு செய்பவர்களின் எண்ணிக்கை சுமார் 25 லட்சமாகும். அதாவது முதலாளிமாருக்கும் ஊழியர்களுக்குமிடையில் நேரடி தொடர்பு இல்லாதவர்களே இதற்குப் பங்களிப்பு செய்கின்றனர்.

எல்லோரும் தங்களால் இயலுமான வரையில் தொழில்  செய்கிறார்கள். வீட்டு வேலை செய்பவர்கள், மேசன் பாஸ் போன்ற அனைத்து முறைசாரா துறைகளில் ஈடுபடுபவர்கள் தங்கள் கை மற்றும் கால்கள் வலுவாக இருக்கும் வரை தொழில்  செய்கிறார்கள். அதன் பிறகு, அவர்கள் எந்த பாதுகாப்பும், வாழ்வாதாரமுமின்றித் தவிக்கும் நிலை உண்டு.

அரச ஊழியர்களைக் கவனத்தில் கொள்வோமாயின், அவர்கள் மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்குகிறார்கள். மேலும் அவர்களுக்கு ஓய்வூதியம் உண்டு.

அவர்கள் இறக்கும் வரை அந்த ஓய்வூதியத்திற்கு அவர்களுக்கு உரிமை உண்டு. மகப்பேறு விடுமுறை போன்ற பல நன்மைகள் உள்ளன. தனியார் துறை ஊழியர்களுக்கும் இதே வசதிகள் உள்ளன. அவர்களுக்கு ஓய்வூதியத்திற்குப் பதிலாக  ஈ.பி.எவ்., ஈ.ரி.எவ். நிதி போன்ற நன்மைகள் உள்ளன.

ஏதேனும் விபத்து ஏற்பட்டால் அது குறித்து கவனம் செலுத்துவதற்கோ அல்லது 55 வயதான பின்னர் கொடுப்பனவை பெற்றுக்கொள்வதற்கு இவர்களுக்கு மாத்திரமே உரிமை உண்டு. இதேபோன்று தாய் சேய் விடுமுறையை பெற்றுக்கொள்வதற்கும் இவர்களுக்கு வசதி உண்டு என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

முறைசாரா சேவையில் ஈடுபட்டுள்ளோரால் முன்வைக்கப்படும் ஆலோசனைகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் தொழில் கௌரவம் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 142 விதிகளுக்கு அமைந்ததாக வடிவமைப்பதே தொழில் அமைச்சின் நோக்கமாகும்.

இவை வர்த்தமானி அறிவிப்பின் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்ட பின் இந்த விதிகளுக்கு மாறாகச் செயற்படுவோருக்கு எதிராக நடவடிக்கள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் எண்ணக்கருவுக்கு அமைவாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு  அமைச்சு ‘கரு சரு’ என்ற வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளது.

‘கரு சரு’ வேலைத்திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்படும் அமைப்பு தொழிற்சங்க கட்டமைப்பு அல்ல. சட்டத்தரணிகள், வைத்தியர்கள் போன்றோருக்காக இருக்கும் அமைப்புகளாகும். இவை தொழில் அமைச்சில் பதியப்பட்டவை அல்ல.

வீட்டுப் பணிப்பெண் மற்றும் ஓட்டோ ஓட்டுநர் முதலானவர்களுக்காக தொழில் கௌரவ அங்கீகரிப்பு உள்ளிட்ட நன்மைக்கான ஆலோசனைகளை முன்வைப்பதற்காக இவ்வாறான அமைப்பை அமைத்து அதன் ஊடாக  முன்வைக்கப்படும் ஆலோசனைகளின் அடிப்படையில் சட்ட ரீதியிலான அங்கீகாரத்தை வழங்குவதற்கே நாம் முயற்சிக்கின்றோம் என்றும் அமைச்சர் விவரித்தார்.

வெளிநாடுகளில் வீட்டுப்பணிப்பெண்ணை பணிக்கு அமர்த்தவிரும்பும் ஒருவர் அதற்கான அனுமதியை அந்நாட்டு அரசாங்கத்திடமிருந்து பெறவேண்டும்.இதே போன்ற நடைமுறை நமது நாட்டிலும் இருக்க வேண்டும். தொழில் ரீதியிலான அனுமதி பத்திரம் வேண்டும். இதற்கு வழிவகை செய்வதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

இதற்கு வீட்டுப்பணிப் பெண் என்.வி.கியு. தரம் ஒன்று, இரண்டு, மூன்று என்ற தொழில் தகுதி நிலைக்கு தகுதிக்கு வழிவகை செய்து கொடுப்பதே எமது நோக்கமாகும். எனவே, இந்த விடயங்களை விரிவுபடுத்தி அனைத்து உழைக்கும் மக்களுக்கும் சமூகப் பாதுகாப்பு அமைப்பு கட்டமைப்பை  தயாரிப்பதற்கு அங்கீகாரம் வழங்குமாறு அமைச்சரவைக்கு பரிந்துரைத்தோம்.

6 மாதங்களுக்குள் இந்த வேலைத்திட்டத்தை அமைச்சரவை முன்வைக்க வேண்டும் என்று அமைச்சரவை வலியுறுத்தியுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.

கடந்த வருடம் மே மாதமளவில் நாடு தீ பற்றி எரிந்தது. நாடாளுமன்றத்தையும் தீ வைத்து அரசாங்கத்தை கைப்பற்ற முனைந்தனர்.

அந்த காலப்பகுதியில் பொருள்களின் விலைகள் வேகமாக அதிகரித்தன. இதேபோன்று பொருள்களின் விலைகள் அதிகரித்தால் இன்று நாம் பிச்சை எடுக்கும் நிலையிலும் பார்க்க மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருப்போம்.

பொருள்களின் விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்தியுள்ளோம் என்றும் அமைச்சர் மனுஷ நாணயக்கார மேலும் தெரிவித்தார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.