அரசியல் தலையீடின்றி கிரிக்கெட்டை பாதுகாக்கவேண்டியது பொறுப்பாகும் ஜனாதிபதி ரணில் ஆணித்தரம்

இரு தரப்பினருக்கு இடையிலான மோதல் காரணமாக இந்நாட்டின் கிரிக்கெட் சரிவை சந்தித்துள்ளது. எனவே, அரசியல் தலையீடின்றி கிரிக்கெட்டை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அனைவரையும் சார்ந்துள்ளதென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

கிரிக்கெட் தொடர்பிலான பிரச்சினையில் எவரையும் பாதுகாக்க வேண்டிய அவசியம் தனக்கு இல்லை என்பதோடு,   சித்ரசிறி அறிக்கைக்கமைய புதிய கிரிக்கெட் சட்டமொன்றை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை தான் பல தடவைகள் விளக்கியிருந்தாகவும்  ஜனாதிபதி தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வரவு செலவுத்திட்ட  விவாதத்தில் புதன்கிழமை உரையாற்றுகையிலேயே  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டவை வருமாறு –

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பை நிறைவேற்ற முடிந்தமை மகிழ்ச்சிக்குரியது. அதற்காக வாக்களித்த 120 எம்.பி.க்களுக்கும் நன்றி தெரிவிகிறேன். அந்த பலத்துடன் நாம் முன்னேறிச் செல்வோம்.

மேலும், எதிராக வாக்களித்த 77 பேருக்கும் நன்றி. அவர்களுக்கு இந்த சபையில் ஒத்துழைப்பு இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஆட்சியாளர்களுக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பு வழங்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். அதற்கான சூழலை நானே உருவாக்கினேன். நாட்டின் ஜனநாயகத்தையும் வலுப்படுத்தியுள்ளோம். எனவே, வரவு – செலவுத்திட்ட விடயத்திலாவது எமக்கு ஆதரவு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

முன்னாள் ஜனாதிபதி ஒரு சட்டத்தரணி. இதற்கு முன்னர் அவர் வழக்குகளைச் சந்தித்துள்ளார். அவர் நிரபராதி என்றால் விடுவிக்கப்படுவார். அந்த ஜனநாயகத்தை இந்த நாட்டில் உருவாக்கியுள்ளோம். எனவே, நாம் தேர்தலுக்கு அஞ்சவில்லை.   அடுத்த வருடத்தில் ஜனாதிபதித் தேர்தல்,  நாடாளுமன்றத் தேர்தல் ஆகிய இரண்டையும் நடத்துவோம். அதன் பின்னர் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் நடத்தப்படும்.

அண்மையில் எதிர்க்கட்சித் தலைவர் கேள்வியொன்றை எழுப்பியிருந்தார். அது தொடர்பான அறிக்கை எனக்கு கிடைத்துள்ளது. ஏபிசி எண்டர்பிரைசஸ் தியாகராஜா விநாயகமூர்த்தி, எம்.பி.டி.யூ.கே. மாபா பத்திரன மற்றும் 24 பேருக்கு எதிராக சட்டமா அதிபரால் வழக்குத்  தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2023, 2024 ஆம் ஆண்டுகளில் திருகோணமலை சிறைச்சாலைக்கு உலர் உணவு மற்றும் பாண் விநியோகத்திற்கான கேள்வி மனுவை ஏபிசி எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு வழங்கியமை தொடர்பிலேயே அந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுதாரரின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகத் தீர்மானித்துள்ளமை மற்றும் 25 லட்சம் ரூபா நட்டஈடு பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் எவ்வாறான தகவல்கள் அவசியம் என அறிவித்தால் சட்டமா அதிபரிடம் வினவிய பின்னர் அறிவிக்க முடியும்.

அடிப்படை உரிமை மீறலே இங்கு நடந்துள்ளது. குற்றவியல் வழக்குக்கு போதிய ஆதாரங்கள் இல்லை என்றும், அது தொடர்பிலான பிரத்தியேகமான சட்டத்தின் கீழ் செயற்பட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் நம்பிக்கை இல்லை என்பதே இங்குள்ள பிரச்சினையாகும்.  நாம் அனைவர் மீதும்  மக்கள் நம்பிக்கை இருக்கிறது. உரிய  நடவடிக்கைகளை முன்னாள் ஜனாதிபதி மேற்கொள்ளவில்லை என்று கூறப்பட்டுள்ளது.  அதன் பின்னர் என்ன நடந்தது என்பது தொடர்பில் விரிவான விளக்கம் அவசியப்படுகிறது.

ஆட்சியமைக்கத் தேவையான  பெரும்பான்மை இருக்குமாயின் ஆட்சியமைக்குமாறு  எதிர்க்கட்சித் தலைவரிடம்  கோரப்படும். இது தான் எமது நாட்டின் பொதுவான சம்பிரதாயம்.  ஆனால் நமது எதிர்க்கட்சித் தலைவர் அதைச் செய்யவில்லை. இது மக்கள் நம்பிக்கை மீறலாகும். இந்த பிரதமர் பதவியை ராஜபக்‌ஷவினர்  எனக்குத் தரவில்லை. எம்.பிக்கள் என்னிடம் வந்து பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தனர். நான் அதனை ஏற்றுக்கொண்டேன். நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு ஒத்துழைப்பு கோரினேன். அதனால் மக்கள் நம்பிக்கை என்னிடத்திலேயே உள்ளது. எனக்கு ஆதரவளியுங்கள்.

நான் இந்தப் பொறுப்பை ஏற்க முன்வந்ததால் எனது வீட்டுக்கு தீ மூட்டப்பட்டது.  நாடாளுமன்றமும் சுற்றி வளைக்கப்பட்டது.  என்னை பதவி விலகுமாறு எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்தனர். பெரும்பான்மையுடன் வாருங்கள் இல்லாவிட்டால் பதவி விலகப்போவதில்லை என்று அறிவித்தேன்.

நாடாளுமன்றத்தை முற்றுகையிட வந்தபோது கட்சித் தலைவர்கள் தப்பியோடினர். அதனால் நாடாளுமன்றத்தைப் பாதுகாக்க எந்தவொரு நடவடிக்கையும் எடுக்குமாறு  இராணுவத் தளபதிக்குப் பணிக்க வேண்டியிருந்தது. அதனை ஆராய்ந்து பார்க்கும் பட்சத்தில்  பொறுப்புக் கூற வேண்டியவர்கள் யார் என்பது தெரிந்துவிடும். எனவே நாடாளுமன்றத்தின் நேரத்தை வீணடிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், கிரிக்கெட் விவகாரத்தில் நான் சிலரைப் பாதுகாக்க முற்படுவதாகக் கூறப்பட்டது. கிரிக்கெட் விவகாரம் நீண்ட கால பிரச்சினை.  இரு தரப்பினருக்கு இடையிலான மோதல் காரணமாக கிரிக்கெட் சரிவை சந்தித்துள்ளது. அதற்கான தீர்வாக புதிய சட்டத்தை உருவாக்கி சட்டத்துக்கமைய சரியான குழுவை தெரிவு செய்ய வேண்டும் என்றே நான் அனைத்து சந்தர்ப்பங்களிலும் வலியுறுத்தியுள்ளேன். அதற்காகவே சித்ரசிறி அறிக்கையை பின்பற்றி அந்த சட்டத்தை உருவாக்குமாறு கூறினேன்.

குறித்த வழக்கு தொடர்பில் அமைச்சருக்கு அறிவுறுத்தியிருந்தேன்.  இவ்வாறான நிலைமைகள் தொடரும் பட்சத்தில் ஐ.சீ.சீ தடையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் கூறியிருந்தேன்.

அதேபோல் சுற்றுலா பயணிகள் வருகையும் குறைவடையும் என கூறினேன்.  அது தொடர்பிலான வழக்குத் தாக்கல் செய்யப்பட்டால் அதிலிருந்து விடுபட முடியாதென்றும் கூறினேன். அமைச்சரவைக்குள்ளும் அதன் பின்னரும் இதுபற்றிப் பேசினோம்.

தனக்கு சட்டத்தரணியொருவர் அவசியம் என அமைச்சர் கூறியிருந்தார். மறுதினம் இவர்கள் வழக்கு தொடுக்கப் போவதாக எனக்கு தகவல் கிடைத்திருந்தது. அதற்கு தயாராகுமாறு கூறிய போது சட்டமா அதிபரும் அங்கு இருந்தார். முன்னாள் ஜனாதிபதியும் இருந்தார். இவருக்கான முன்னிலையாகுமாறு சட்டமா அதிபரை  நாம் வலியுறுத்தினோம்.

இவர்கள் தாமதமாக சென்றமையால் வழக்கு நிறைவடைந்திருந்தது. அது தொடர்பில் அமைச்சரிடம் அறிக்கை கோரியுள்ளேன். எவ்வாறான தீர்ப்பு கிடைக்கும் என்பதை கணிக்க முடியாது.  இருப்பினும் போட்டிகள் நடத்தப்படவிருக்கும் தற்போதைய சூழலில் நீதிமன்ற தீர்ப்பு அவசியமாகிறது.  இந்தத் தடை உத்தரவு செல்லுபடியாகுமான என்பதும் எமக்குத் தெரியாது.

அதேநேரம், ஐ.சீ.சீயுடனும் கலந்தாலோசித்தேன். அரசியல் தலையீடு உள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டினர். சம்மி சில்வாவை பாதுகாக்க வேண்டிய அவசியம் இல்லை. பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உள்ளன. அதனாலேயே புதிய சட்டத்தை கொண்டுவர வேண்டுமென வலியுறுத்தினேன்.

தற்போது எமக்கு எதிராக 02 குற்றச்சாட்டுக்கள் உள்ளன. அதன்படி கிரிக்கெட் சபையை நாம் கலைத்ததாக கூறப்படுகிறது. அதற்கு அமைச்சரின் செயற்பாடு சட்டபூர்வமானதா இல்லையா என்பதை நீதிமன்றம் தீர்மானிக்குமென நான் தெரிவித்துள்ளேன். மறுமுனையில் நாடாளுமன்றம் இதற்காக ஒன்றுபட்டதெனவும் குற்றம்சாட்டப்படுகிறது. அமைச்சர் கூறிய மாத்திரத்தில் எதிர்க்கட்சி எழுந்து அதனை நிறைவேற்றும் போது அரசியல் தவிர்ந்த செயற்பாடு என்று எவ்வாறு கூற முடியும்.

அதற்காக எவரையும் சாடுவதில் பயனில்லை. நடந்த தவறை இந்த சபை ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த சபையில் நீதிபதிகள் மீது  அவதூறு தெரிவிக்கப்பட்டமைக்காக அமைச்சர் நிமல் சிறிபால டி நில்வா மன்னிப்பு கோரினார்.

இது தற்காலிக தீர்ப்பாகும். அதற்காக நீதிபதிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அவர்களை நான் தெரிவு செய்யவில்லை. பிரதம நீதியரசரால் தெரிவு செய்யப்பட்ட ராஜகருணாவை மேன்முறையீடு நீதிபதியாக நியமிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது

நாடாளுமன்றத்தின் சிறப்புரிமை என்ற போர்வையில் விமர்சிக்க முடியாது. இங்கு  சிறப்புரிமை கிடையாது. நிலையியற் கட்டளைகளின்படி  அந்தப் பிரேரணை நிறைவேற்றப்படவில்லை. சபை எவ்வாறு செயற்பட முடியும்? எங்கள் பணியை நாம் செய்வோம். நீதிமன்றத்தின் வேலையை நீதிமன்றம் செய்கிறது.

அரசமைப்பின் 04 ஆவது சரத்தில் கைவைக்க முடியாது என்று நான் எப்போதும் கூறிவருகிறேன். நான் ஒருபோதும் நீதிபதிகளைக் குறை கூறியதில்லை. தீர்ப்புகளை நாம் விமர்சிக்கலாம். ஆனால் ஒரு நீதிபதிகளைக் குற்றம் சாட்ட முடியாது. அப்படியானால், அது நிலையியற் கட்டளையின் கீழ் செய்யப்பட வேண்டும். ஏன் இந்தச் சபையை அந்த நிலைமைமைக்குத் தள்ளுகிறோம்? இதற்கு முன் இப்படி நடந்ததில்லை. அதனால் தான் கவலையடைகிறேன்.

நெவில் சமரக்கோனுக்கு எதிராக எமக்கு செயற்பட வேண்டியிருந்தது. முதலில் நிலையியற் கட்டளைகளின் பிரகாரம் அவரின் செயற்பாடுகள் குறித்து விவாதிக்க அனுமதி பெற்றோம். மேலும், 70 களில் ஐக்கிய தேசியக் கட்சியில் எம்முடன் இணைந்து செயற்பட்ட ஒருவர் தான் ரெகவ. இறுதியில் அவரை தேர்தலில் போட்டியிடுமாறு ஜனாதிபதி பிரேமதாஸ கேட்டுக்கொண்டார். அவர் இந்த சபையில் உப தலைவராக செயற்பட்டார். அவரை நாம் ஏன் விமர்சிக்க வேண்டும். அவரை ஜனாதிபதி பிரேமதாஸ நம்பினார். நானும் அவரை நம்பிய ஒருவர்.நான் அவரை வியட்நாமுக்கான தூதராக அனுப்பினேன். அவர் ஒரு நல்ல மனிதர். அவரின் மகனையும் நான் அறிவேன். அவர்கள் இந்த விடயங்களில் தொடர்புபட்டுள்ளார் என்று நினைக்கவில்லை. எங்களுடன் இருந்து எங்களுடன் பணியாற்றியவரை விமர்சிப்பது குறித்து கவலையடைகிறேன்.

இங்கு நாம் நிலையியற்கட்டளைகள் குறித்து கவனம் செலுத்த வேண்டும். நீதிமன்றத்துடன் முரண்பட முடியாது. மேலும், அரசமைப்புப் பேரவை  என்பது நாடாளுமன்றத்தின் ஓர் அங்கம் அல்ல. அது நிறைவேற்று அதிகாரத்தின் ஓர் அங்கம்.  நியமனங்களை மேற்கொள்ளும் போது பரிந்துரைக்கப்பட்ட பெயர்கள் பொருத்தமானதா இல்லையா என்று கூறுங்கள்.

இல்லாவிடின் பெயர்களைப் பரிந்துரைக்கும் பொறுப்பு அவர்களிடம் செல்லும். எனவே நீங்கள் செய்யும் எந்தவொரு செயலுக்கும் எதிராக அடிப்படை உரிமை மீறல் வழக்குத்  தாக்கல் செய்ய முடியும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுச் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளோம். ஆணையாளர்களின்  பெயர்களுக்காகக் காத்திருக்கிறேன். இப்போது 3 மாதங்கள் ஆகிவிட்டது.

ஊழல் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால் ஆணைக்குழுவுக்கு  பெயர்களை அனுப்புவதில்லை. இது தொடர்பில் சட்டமா அதிபரிடம் வினவினோம். ஒரு வார்த்தை தவறாக இருப்பது பிரச்சினையல்ல. நியமனம் செய்வதற்குப்  பெயர்களை அனுப்புமாறு கூறினேன். எனக்கு எதிராக யார் வேண்டுமானாலும் வழக்கு தொடரலாம்.இன்னும் இதனை அங்கீகரிக்க முடியாதுள்ளது.

இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டனவாகவோ வேறு தீர்ப்பு வழங்கப்பட்டதாகவோ எனக்கு பெயர் அனுப்பப்பட்டிருந்தால் நான் தான் அந்தப் பெயரைத் திருப்பி அனுப்ப முடிவு செய்தேன். அது தொடர்பில் உங்கள் கடிதம் கிடைத்தது. அதற்கு நான் நன்றி கூறுகிறேன். அரசமைப்பு சபையை இவ்வாறு நடத்த முடியாது.

தெரிவுக் குழுவை அமைத்து இதை எப்படிக் கையாள்வது என்பது பற்றி ஆராய்வோம். இந்த விவகாரத்தால் முழு நீதிமன்றமும் முடங்கியுள்ளது. தெரிவுக்குழுவொன்றை நியமிப்பது தொடர்பில் நான் பிரதமருக்குப்  பரிந்துரைக்கிறேன்.

சட்டங்களை இயற்றுவதற்காக இந்த சட்டசபை உள்ளது. நாங்கள் சில சமயங்களில் ஒன்று இரண்டாக மாறும் வரை நாம் பணிகளைத் தொடங்க மாட்டோம்.  நடிப்பதற்காக மக்கள் எங்களுக்கு பணம் கொடுக்கவில்லை. சட்டங்களை இயற்றுவதற்குத்தான் பணம் செலுத்துகிறார்கள்.

எனவே முதல் ஒரு மணி நேரம் கழித்து நாம் முக்கிய பணிகளுக்குச் செல்ல வேண்டும் என நான் பரிந்துரைக்கிறேன். இது தொடர்பில் அமைச்சரவையிலும் கலந்துரையாடுகிறேன். தற்போது அடுத்த ஆண்டு பல புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இவற்றை இனியும் தள்ளிப் போட முடியாது.

அடுத்த ஆண்டு எம்.பி.க்கள் தமது தொகுதிகளுக்கு செல்ல வேண்டும். அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ள வேண்டும். அவற்றுக்கிடையில் இங்கு சிக்கிக் கொண்டிருக்க முடியாது. முதல் ஒரு மணிநேரத்தின் பின்னர் பிரதான பணிகளை ஆரம்பிக்க வேண்டும்” என்று ஜனாதிபதி தெரிவித்தார். (

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.