முல்லைத்தீவின் அகிலத்திருநாயகிக்கு நாடாளுமன்றில் வாழ்த்துத் தெரிவிப்பு!

அண்மையில் பிலிப்பைன்ஸ்  நாட்டில்  நடைபெற்ற நேஷனல் மாஸ்டர்ஸ் என்ட் சீனியர் அத்லடிக்ஸ்  போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய முல்லைத்தீவை சேர்ந்த வீராங்கனை அகிலத் திருநாயகி  இரண்டு தங்கப்பதக்கங்களை தனதாக்கி நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

ஆகவே  இவருக்கு இந்த உயரிய சபை ஊடாக வாழ்த்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் உறுப்பினர் உதயனி கிரிந்திகொட குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற குழுநிலை விவாதத்தின் போது மேற்கண்டவாறு வாழ்த்துத் தெரிவித்தார்.

இலங்கையிலிருந்து கலந்து கொண்ட முல்லைத்தீவு – முள்ளியவளை பகுதியை சேர்ந்த அகிலத்திருநாயகி (72 வயது) (ஓய்வு பெற்ற சிறைச்சாலைகள் உத்தியோகத்தர்) என்பவரே  இந்த சாதனையை படைத்து நாட்டுக்கு பெருமை தேடிக் கொடுத்துள்ளார்.

இந்த வீராங்கனைக்கு வாழ்த்து தெரிவிப்பதுடன், அவருக்கு தேவையான வசதிகளை பொறுப்பான அமைச்சு வழங்க வேண்டும் என்று குறிப்பிடுகிறேன். – என்றார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அமர்வின் போது தமிழ் பிரதிநிதிகள் எவராலும் இந்த சாதனை பற்றி பேசவில்லை, வாழ்த்து தெரிவிக்கவுமில்லை.

1500 மீற்றர் ஓட்டப்போட்டி மற்றும், 5000 மீற்றர்  விரைவு நடை ஆகிய போட்டிகளில்  கலந்துகொண்டு இந்த இரண்டு தங்கப் பதக்கங்களை அகிலத்திருநாயகி வென்றுள்ளார்.

72 வயதில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்த இவர் மேலும் 800 மீற்றர் ஓட்டப்போட்டியில் வெண்கலப் பதக்கத்தையும் தனதாக்கியுள்ளார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.