கூட்டு ஒப்பந்தமின்மையால் தோட்ட கம்பனிகள் தான்தோன்றித்தனமாகச் செயற்படுகின்றனவாம்!  இராதாகிருஸ்ணன் குற்றச்சாட்டு

சம்பள நிர்ணய சபையா அல்லது கூட்டு ஒப்பந்தமா என்று தற்போது பேசப்படுகிறது.என்னை பொறுத்தவரை  கூட்டு ஒப்பந்தம் மீண்டும் அமுல்படுத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளேன்.

கூட்டு ஒப்பந்தம் இல்லாத காரணத்தால் தோட்ட கம்பனிகள் தான்தோன்றித்தனமாகச் செயற்படுகின்றன. ஆகவே கூட்டு ஒப்பந்தம் தொடர்பான தீர்மானங்களுக்கு மலையக மக்கள் முன்னணி இணக்கம் தெரிவிக்கும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் நீர் வழங்கல்,தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி  அமைச்சுக்கான செலவுத்தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியவை வருமாறு –

1994 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மலையகத்துக்கு என்று தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி என்ற அமைச்சை உருவாக்கி, காலஞ்சென்ற சௌமிய மூர்த்தி தொண்டமானுக்கு அந்த அமைச்சை வழங்கினார்.

மலையகத்துக்கு என்று ஓர் அமைச்சு உருவாக்கப்பட்டதன் பின்னரே மலையகத்துக்கான அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டன.

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பெருந்தோட்ட காணி விவகாரத்துக்காக 4 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

தற்போதைய பொருளாதாரப் பாதிப்புக்கு மத்தியில் பெருந்தோட்ட பகுதிகளுக்கு சகல துறைகள் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்த வேண்டும்.

பெருந்தோட்ட பகுதிகளில் லயன் குடியிருப்புகளில் தீ விபத்து வழமையானதொன்றாக காணப்படுகிறது.கடந்த ஆண்டு 795 குடும்பங்களை சேர்ந்த 3306 பேரும்,2023 ஆம் ஆண்டு நிறைவடைந்து 10 மாத காலப்பகுதியில் 73 குடும்பங்களை சேர்ந்த 307 பேரும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

பெருந்தோட்ட பகுதிகளில் இடம்பெறும் அனர்த்தங்களின் போது   அனர்த்த முகாமைத்துவ நிலையம் கவனத்திற் கொள்ளாமல் செயற்படுகிறது.

பெருந்தோட்ட கம்பனிகள் ஊடாக அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிடுவது நியாயமற்றது.காணப்படும் சட்ட சிக்கல்களை அனர்த்தங்களின் போதும்,அதன் பின்னரான போதும் குறிப்பிட்டுக் கொண்டிருக்க முடியாது.

சம்பள நிர்ணய சபையா அல்லது கூட்டு ஒப்பந்தமா என்று தற்போது பேசப்படுகிறது.என்னை பொறுத்தவரை  கூட்டு ஒப்பந்தம் மீண்டும் அமுல்படுத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளேன். கூட்டு ஒப்பந்தம் இல்லாத காரணத்தால் தோட்ட கம்பனிகள் தான்தோன்றித்தனமாகச் செயற்படுகின்றன.

ஆகவே கூட்டு ஒப்பந்தம் தொடர்பான தீர்மானங்களுக்கு  மலையக மக்கள் முன்னணி இணக்கம் தெரிவிக்கும்.

மலையகம் தொடர்பில் குறைகளை மாத்திரம் குறிப்பிட முடியாது.பல நிறைகளும்,முன்னேற்றங்களும் காணப்படுகின்றன.எமது மலையக இளைஞர், யுவதிகள் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் சாதிக்கிறார்கள்.

எதிர்வரும் மாதம் 24 ஆம் திகதி மலையகம் 200 நிகழ்வை நாங்கள் நடத்தவுள்ளோம். எமது சமூகத்தின் முன்னேற்றம் மற்றும் நவீன அடையாளத்தை நான் உறுதிப்படுத்த வேண்டும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது பல வாக்குறுதிகளை வழங்கியுள்ளார்.எமது அரசாங்கத்திலும் பல வாக்குறுதிகளை வழங்கினார். ஆனால் எதனையும் செய்யவில்லை.அவர் எவ்வாறானவர் என்பதை நாங்கள் நன்கு அறிவோம்.

கொட்டகல பகுதியில் கல்வியியற் கல்லூரி அமைக்கப்பட்ட போது அதற்கு ஸ்ரீ பாத என்று பெயர் சூட்ட வேண்டும்.தமிழ் மாணவர்களுக்கு முழுமையான அங்கீகாரம் வழங்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் சௌமிய மூர்த்தி தொண்டமான் வலியுறுத்தினார்.

அதன்போது தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஸ்ரீபாத கல்லூரியில் 75 சதவீதம் தமிழ் மாணவர்களுக்கும்,25 சதவீதம் சிங்கள மாணவர்களுக்கும் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.தற்போதும் அவர் இந்த நிலையில் இருந்து மாற்றமடைந்திருப்பார் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. – என்றார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.