யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு இந்திய அரசாங்கம் விசேட நிதியுதவி!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் 100 பேருக்கு, இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படவுள்ள நிதியுதவிச் செயற்றிட்டம் வெள்ளிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்துக்கு மூன்று நாள்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இந்த நிதியுதவித் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.

இந்தத் திட்டத்துக்கான முதற்கட்ட நிதி ரூபா மூன்று மில்லியன் வெள்ளி காலை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயால் யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் மற்றும் மாணவர் பிரதிநிதிகளிடம்  கையளிக்கப்பட்டது. அத்துடன் இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் கலாசார உறவுகளுக்கான பேரவையின் உயர்கல்விப் புலமைப்பரிசில் (ஐ.சி.சி.ஆர்) பெற்று இந்தியாவில் உயர்கல்வி பெறச் செல்லும் இந்து கற்கைகள் பீட விரிவுரையாளர்கள் இருவருக்கான அனுமதிக் கடிதமும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, யாழ்ப்பாணம் இந்தியத் துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், கொழும்பிலுள்ள இலங்கைக்கான இந்தியத் தூதரக அதிகாரிகள், யாழ்ப்பாணம் இந்தியத் துணைத் தூதரக அதிகாரிகள், பல்கலைக்கழகப் பதிவாளர், நிதியாளர், பீடாதிபதிகள் மற்றும் மாணவர் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

பொருளாதார நிலையில் சவாலுக்குட்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் 100 பேரின் வாழ்வாதாரச் செயற்பாடுகளுக்காக ஒவ்வொருவருக்கும் மாதாந்தம் தலா ஐயாயிரம் ரூபா விசேட நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் 11 ஆம் திகதி, யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையத்தை யாழ்ப்பாண மக்களுக்கு உவந்தளிக்கும் நிகழ்வுக்கு இந்தியப் பிரதமரின் விசேட பிரதிநிதியாக வந்திருந்த இராஜாங்க அமைச்சர் கலாநிதி எல். முருகன் அறிவித்த படி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்களில் பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள குடும்பங்களைச் சேர்ந்த 100 பேருக்கு விசேட நிதியுதவியை வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் முடிவு செய்திருந்தது.

இந்தத் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தால் சகல பீடங்களில் இருந்தும் தெரிவு செய்யப்பட்டு முன்மொழியப்பட்ட ஒவ்வொரு மாணவனுக்கும் நடப்புக் கல்வி ஆண்டில் இருந்து, அடுத்து வரும் ஒரு வருட காலத்துக்கு இந்த நிதியுதவி வழங்கப்படவுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.