செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை மேம்படுத்த ஜனாதிபதி ரணில் நடவடிக்கை!

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்காக அடுத்த ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் 1.5 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இதனூடாக இலங்கையில் முதன்முறையாக ஏ.ஐ தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் பணியை ஆரம்பித்துள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் –

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்காக அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் 1.5 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து துறைசார் குழுவினருடன் கலந்துரையாடியிருந்தேன். இலங்கையில் முதன்முறையாக ஏஐ தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் பணியை ஆரம்பித்துள்ளோம்.

மேலும், விஞ்ஞான மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக மேலும் 08 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுவரை இந்தளவு நிதி ஒதுக்கப்பட்டதில்லை. நாம் முன்னேற வேண்டுமானால், அறிவியல் மற்றும் ஆராய்ச்சித் துறைகளில் கவனம் செலுத்த வேண்டும்.

பசுமைப் பொருளாதாரம் மற்றும் டிஜிற்றல் பொருளாதாரத்தை உருவாக்குவதே எங்கள் நோக்கம்.

முதலாவதாக, இந்த அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்ட 08 பில்லியன் தொகையை செலவழிக்க தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க கவுன்சில் என்ற பெயரில் ஒரு நிறுவனம் நிறுவப்படும்.

நாடாளுமன்றத்தில் தேவையான சட்டங்களை நிறைவேற்றிய பிறகு, புதிய அறிவியல் பொருளாதாரத்தையும் பசுமைப் பொருளாதாரத்தையும் உருவாக்கத் தேவையான நிறுவன ரீதியான கட்டமைப்பு உருவாக்கப்படும். – என அவர் மேலும் தெரிவித்துள்ளார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.