நகர அபிவிருத்தியா? நரக அபிவிருத்தியா? கல்முனை மாநகர சபைஉறுப்பினர் ராஜன் கேள்வி .
கல்முனையில் இனவாதத்தை கக்கிக்கொண்டு தமிழர் பிரதேசத்தை அடக்கி ஒடுக்குவதற்காக நகர அபிவிருத்தி செய்ய சிலர் தலைப்பட்டு இருக்கின்றார்கள். இது நகர அபிவிருத்தியா நரக அபிவிருத்தியா?
இவ்வாறு கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும் சமூக செயற்பாட்டாளருமான சந்திரசேகரன் ராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் கூட்டிய ஊடகவியலாளர் மாநாடு நேற்று கல்முனையில் அவரது பணிமனையில் நடைபெற்றது.
அங்கு அவர் மேலும் கூறுகையில்..
கல்முனையில் உள்ள தமிழ் முஸ்லிம் மக்களை பகடைக்காயாக வைத்துக் கொண்டு வங்குரோத்து அரசியலை நடத்தும் சில முஸ்லிம் அரசியல்வாதிகள் தங்களது சுயலாபத்தை ஈட்டிக் கொள்வதற்காக தமிழ் அதிகாரிகளை இடம் மாற்றி வருகிறார்கள். அதற்கு எமது ஒரு சில அரசியல் வாதிகளும் துணை போகிறார்கள்.
தமிழ் மக்களது பூர்வீக நிலங்களை அபகரிக்கவும் விவசாய குளங்களை நிரப்பவும் அந்த நீர்ப்பாசன மற்றும் காணிப் பிரிவு அதிகாரிகள் தடையாக இருப்பதாக கூறி இந்த அதிகாரிகளை அழுத்தம் கொடுத்து மாற்றி வருகிறார்கள்.
மறைந்த ஏர் மன்சூர் தமிழ் முஸ்லிம் மக்களின் வாக்குகளை பெற்று பாராளுமன்றம் சென்றார் .அவர் கட்டிய கல்முனை பொதுச்சந்தை இன்று இடிந்து விழும் நிலையில் இருக்கின்றது. கல்முனையில் உள்ள வீதிகள் குளங்கள் வடிகால்கள் எல்லாம் மிகவும் மோசமாக இருக்கின்றது. அவற்றை எல்லாம் திருத்தாமல் தமிழர் பிரதேச நிலங்களை அபகரிப்பதில் ஒரு சில முஸ்லிம் அரசியல்வாதிகள் முனைப்பு காட்டி வருகின்றார்கள். இவர்களது வங்குரோத்து அரசியலை நடத்த தமிழ் முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். அப்பொழுதுதான் நாங்கள் நிம்மதியாக வாழலாம். ஒற்றுமை சமாதானம் நிம்மதி வரும் என்றார்.
கருத்துக்களேதுமில்லை