கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு ரோட்டறி கழகத்தால் மருத்துவ உபகரணங்கள்!
கிளிநொச்சி வைத்தியசாலைக்கு 6.6 கோடி பெறுமதியான உடல் குழாய் உற்று நோக்கல் இயந்திரம் ரோட்டரி கழகத்தால் கையளிக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை வைத்தியசாலை மண்டபத்தில் வைத்து இந்த நிகழ்வு இடம்பெற்றது.
கொழும்பு ரொட்டரி கழகத்தின் ஏற்பாட்டில் ஆஸ்திரேலியன் மெடிக்கல் பவுண்டேசனின் நிதி பங்களிப்புடனும் சர்வதேச ரொட்டரி கழகங்களால் 6.6 கோடி ரூபா பெறுமதியான குறித்த மருத்துவ பரிசோதனை இயந்திரம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் விருந்தினர்கள் வரவேற்கப்பட்டு, மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வு இனிதே ஆரம்பமானது.
அதனைத் தொடர்ந்து 6.6 கோடி ரூபா பெறுமதியான உடல் குழாய் உற்று நோக்கல் இயந்திரம் வைத்தியசாலையிடம் கையளிக்கப்பட்டது.
2017 ஆம் ஆண்டு முதல் உடல் குழாய் உற்று நோக்கல் பரிசோதனை வசதி கிளிநொச்சி வைத்தியசாலைக்கு இல்லாமையால் நோயாளர்கள் பல்வேறு சிரமங்களை எதிர் கொண்டு வந்துள்ளனர்.
அவசர தேவைகளின் நிமித்தம் நோயாளர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டும் வந்தனர்.
கிளிநொச்சி மாவட்ட மக்கள் மாத்திரமல்லாது முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலை, மூங்கிலாறு மாங்குளம், மல்லாவி, புதுக்குடியிருப்பு ஆகிய பிரதேச வைத்தியசாலைகள், யாழ். மாவட்டத்தில் வடமராட்சியிலுள்ள வைத்தியசாலை மற்றும் மன்னார் இலுப்பைக்கடவை ஆடிக்காட்டிவெளி ஆகிய பகுதிகளிலுள்ள வைத்தியசாலைகள் என்பன கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அண்மையிலுள்ள வைத்தியசாலைகளாக காணப்படுவதால் மூன்று மாவட்டங்களில் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்களும் இவ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த மருத்துவ பரிசோதனை இயந்திரத்தின் மூலம் சிகிச்சைக்காக வருகை தரும் நோயாளர்களுக்கான பரிசோதனைகள் ஜனவரி மாதம் முதல் முன்னெடுக்கும் வகையில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் எஸ்.சுகந்தன் தெரிவித்தார்.
நிகழ்வில் ரொட்டரி கழக உறுப்பினர்கள், வைத்தியர்கள், தாதியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை